குமரியில் ஒரே நாளில் 28 கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே தெங்கம்புதூர் பகுதியில் கொரோனாவுக்கு முதியவர் ஒருவர் பலியாகி உள்ளார்.
குமரியில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பல பகுதிகளில் சமூக இடைவெளி என்பது ஒரு சில வர்த்தக நிறுவனங்கள் நீங்கலாக மற்ற இடங்களில் ஒழுங்காக கடைபிடிப்பதாக தெரியவில்லை.

இதுதவிர தற்போது வீடுகளில் சுபநிகழ்ச்சிகள் மீண்டும் களைகட்ட துவங்கியுள்ளது. இதனால் சராசரியாக தினமும் 100 பேருக்கு மேல் கொரோனா தொற்று அறிகுறியின்றி, தொற்று பாதிக்கப்பட்ட பலர் தானாக குணமடைந்ததாக கூறப்பட்டாலும், முதியவர்கள், இதயநோய் உள்ளபவர்கள், சர்க்கரை நோய் மற்றும் உயர்தர ரத்த அழுத்தம் உடையவர்கள், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள் கொரோனா தொற்று ஏற்படும் போது, நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, மூச்சு திணறல் ஏற்பட்டு பலியாகி வருகின்றனர்.

இதனால் மாவட்ட நிர்வாகம் கொரோனா அறிகுறி இருந்தால், தாமதிக்காமல், பரிசோதனை செய்து ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை பெற்றால், உயிரை காப்பாற்றும் வாய்ப்புள்ளதாக விழிப்புணர்வு அறிக்கை வெளியிட்டு வருகிறது. இதன்படி சிலர் உடனடியாக பரிசோதனை செய்து சிகிச்சை பெறுகின்றனர். சிலர் அலட்சியம் செய்து மூச்சுத்திணறல் ஏற்பட்டு பின்னர் அவதிபடுகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட தெங்கம்புதூர் பகுதியை சேர்ந்த 58 வயதுடைய ஒருவர் மரணத்தை தழுவினார். இதற்கிடையே குமரியில் ஒரே நாளில் 28 கர்ப்பிணி பெண்கள் கொரோனா தொற்றால் பாதிக்கபப்ட்டுள்ளனர். இவர்கள் தற்போது ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்