நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் திட்டம் போன்றவற்றுக்கு பள்ளங்கள் தோண்டப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஏற்கனவே பயன்பாட்டில் இருந்து வருகின்ற குடிநீர் திட்ட குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது.

மேலும் அந்த பகுதியில் சாலையிலும் பெரும் பள்ளங்கள் ஏற்பட்டு தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது. இதில் குடிநீருடன் கழிவுநீரும் கலந்து சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது.
நாகர்கோவில் டிஸ்லரி ரோட்டில் மாநகராட்சி அலுவலர் குடியிருப்பு முன்புற பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்ட நிலையில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக பாதிப்பு காணப்படுகிறது. தினமும் இந்த பகுதியில் குளம்போன்று தண்ணீர் காணப்படுகிறது. இந்த பாதையை கடக்க வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த பகுதியில் பள்ளம் தோண்டி குழாய் உடைந்த பகுதி சீர்செய்யப்பட்டு, மண் கொண்டு மூடப்பட்டது.
ஆனால் மறுநாளே அதில் மீண்டும் தண்ணீர் கசிய தொடங்கியது. உடைப்பு பெரிதாகி மீண்டும் குளம் போன்று தண்ணீர் தேங்க தொடங்கியுள்ளது. இதனை போன்று பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில் இருந்து வெட்டூர்ணிமடம் செல்லும் சாலையிலும் குழாய் பதித்த இடத்தில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலையில் ஓடி வருகிறது. இதன் காரணமாக இந்த பகுதியில் சாலையில் பள்ளம் ஏற்படும் சூழல் காணப்படுகிறது.
நாகர்கோவில் மாவட்ட தலைமை தபால் நிலையம் முன்பு பெரிய அளவில் பள்ளம் தோண்டப்பட்ட இடத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தேங்கியுள்ளது. தண்ணீர் சாலையில் வழிந்தோடுவதால், அந்த பகுதி சேறும் சகதியுமாக காணப்படுகிறது.
எனவே நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் இதுபோன்ற குடிநீர் குழாய் உடைப்புகளை விரைந்து சீர்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.






0 Comments