இந்தியாவின் அதிகம் தேடப்படும் குற்றவாளி தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் வசிப்பதை முதன்முறையாக அந்நாடு ஒப்புக்கொண்டுள்ளது.

பாரிஸை தளமாகக் கொண்ட நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF) கடந்த 2018 ஜூன் மாதத்தில் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி உதவி அளிப்பது தொடர்பாக பாகிஸ்தானை சாம்பல் பட்டியலில் சேர்த்தது. மேலும் 2019 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஒரு செயல் திட்டத்தை செயல்படுத்துமாறு பாகிஸ்தான் அரசை அந்த அமைப்பு கேட்டுக்கொனடது. ஆனால் இந்த காலக்கெடு பின்னர் கோவிட் -19 தொற்றுநோயால் நீட்டிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த 18- ம் தேதி பாகிஸ்தான் இரண்டு அறிவிப்பாணைகளை வெளியிட்டது. அதில் 26/11 மும்பை தாக்குலுக்கு மூளையாக செயல்பட்டவரும், ஜமாத்-உத்-தாவா தலைவர் ஹபீஸ் சயீத், ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் போன்ற பயங்கரவாத அமைப்புகளின் முக்கிய நபர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதாக பாகிஸ்தான் குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில் தடை செய்யப்பட்ட 88 பயங்கரவாத குழுக்களின் பட்டியலை பாகிஸ்தான் அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதில், ஹிஃபீஸ் சையது, மசூத் அசார், தாவூத் இப்ராஹிம் ஆகியோரை சேர்த்துள்ள அந்நாடு, அவர்களின் அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்வதற்கும், வங்கி கணக்குகளை முடக்குவதற்கும் உத்தரவிட்டுள்ளது.
அந்த பட்டியலில் தாவூத் இப்ராஹிமின் முகவரியையும் பாகிஸ்தான் வெளியிட்டுள்ளது. அதன்படி, கராச்சியில் உள்ள கிளிஃப்டன் என்ற பகுதியில் உள்ள சவுதி மசூதிக்கு அருகில் உள்ள பங்களா தான் தாவூத் இப்ராஹிமின் வீட்டு முகவரி. மேலும் அவரின் மற்ற சொத்துக்களின் முகவரியையும் வெளியிட்டுள்ளது. கராச்சியில் உள்ள நூராபாத்தில் ஒரு பங்களாவும், அவருக்கு உள்ளது தெரியவந்துள்ளது.
இந்தியாவின் அதிகம் தேடப்படும் நபரான தாவுத் இப்ராஹிம் பாகிஸ்தானில் வாழ்கிறார் என்றும், அவருக்கு அந்நாட்டு அரசு உதவி வருவதாகவும் இந்தியா தொடர்ந்து கூறி வந்தது. ஐ.நா.-வும் இந்தியாவின் கருத்தை ஏற்றுக்கொண்ட நிலையில், பாகிஸ்தான் அதனை தொடர்ந்து மறுத்து வந்தது. இந்நிலையில் தான் தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானின் வீட்டு முகவரி குறித்து விவரங்களை வெளியிட்டுள்ளது.
மும்பையின் நிழலுலக தாதாவான தாவூத் இப்ராஹிம் பல்வேறு சட்ட விரோத தொழில்களை நடத்தி வந்தவர். இவர் மீது தீவிரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியது, பண மோசடி, மற்றும் மிரட்டி பணம் பறித்தல், அல் கய்தா, லஷ்கர் இ தொய்பா போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி அளித்தல் போன்ற பல குற்றச்சாட்டுகள் உள்ளன. 257 பேரின் உயிரை பறித்த 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்டவரும் இவர் தான். அதன்பிறகு அவர் இந்தியாவின் அதிகம் தேடப்படும் குற்றவாளியாக கருதப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.






0 Comments