நெல்லையில் 2 திருநங்கைகள் உள்ளிட்ட 3 பேர் அடுத்தடுத்து கொலையான சம்பவத்தில் மேலும் மூவரை கைது செய்ய வலியுறுத்தி உடல்களை வாங்க மறுத்து திருநங்கைகள் நேற்று அரசு மருத்துவமனை முன்பு திடீர் மறியலில் ஈடுபட்டனர். 
பாளை. மகாராஜநகரில் ரிஷிகேஷ், அவரது கூட்டாளிகள் ஸ்ேநாவின், செல்லத்துரை ஆகியோர் கடந்த மாதம் 25ம் தேதி திருநங்கை அனுஷ்காவையும், கடந்த 8ம் தேதி முருகன் என்பவரையும், 18ம் தேதி முருகன் மனைவி திருநங்கை பவானியையும் கயிற்றால் இறுக்கிக் கொலை செய்து சாக்கு மூட்டைகளில் கட்டி கிணறுகளில் வீசினர்.

இதுகுறித்து பாளை ஐகிரவுண்ட் அரசு மருத்துவமனை போலீசார் விசாரணை நடத்தி ரிஷிகேஷ், ஸ்நோவின், செல்லத்துரை ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு மூவரும் பாளை. மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். நேற்று மாலை 3 மணியளவில் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திருநங்கைகள் அனுஷ்கா, பவானி, மற்றும் முருகன் உடல் பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு, பிற திருநங்கைகளிடம் போலீசார் ஒப்படைக்க முயற்சித்தனர். ஆனால் அவர்கள் உடல்களை வாங்க மறுத்து கைதான மூன்று பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேரையும் கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தி அரசு மருத்துவமனை முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர். பின்னர் மாலை 6 மணிக்கு உடல்கள் ஒப்படைக்கப்பட்டது. சிந்துபூந்துறை மின்மயானத்தில் 3 பேர் உடல்களும் தகனம் செய்யப்பட்டது.