உத்திரப்பிரதேசம் ஜலேசார் என்னும் ஊரைச் சேர்ந்த தயாள் கடந்த 30 ஆண்டுகளாகக் கோயில்களுக்கு வெண்கல மணி செய்து தரும் தொழிலைச் செய்துவருகிறார். இந்தத் தொழிலில் சிறந்து விளங்கும் இவர், தற்போது அயோத்தியில் உருவாகும் ராமர் கோயிலுக்கு 2,100 கிலோ எடையுள்ள மணி ஒன்றைச் செய்துகொண்டிருக்கிறார். அந்த மணியை வடிவமைத்தவர் இக்பால் மிஸ்ட்ரி என்னும் இஸ்லாமிய சகோதரர்.
இதுகுறித்து ஆங்கில ஊடகங்களிடம் பேசிய தயாள்,``நமது இஸ்லாமிய சகோதரர்கள், வடிவமைப்பது, உருவாக்குவது ஆகியனவற்றில் சிறந்தவர்கள். இவ்வளவு பெரிய மணியைச் செய்வதென்பது மிகவும் சிரமமானது. ஒரு சிறு பிழை கூட நிகழக்கூடாது. அவ்வாறு நிகழாதவாறு செய்துமுடித்தது மிகவும் சவாலாக இருந்தது” என்று தெரிவித்தார்.

இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த இக்பால், ``இவ்வளவு பெரிய மணி செய்வது சாதாரண விஷயம் இல்லை. சின்னப் பிழையும் ஒட்டுமொத்த வேலையையும் கெடுத்துவிடும். ஆனால், அவ்வாறு எதுவும் நிகழவில்லை. இதுபோன்ற பெரிய மணிகள் பல்வேறு துண்டுகளை வெல்டிங் செய்து செய்வார்கள். அவ்வாறு இல்லாமல் இந்த மணி அடி முதல் நுனிவரை ஒரே பொருளாக இருக்கிறது என்பதுதான் இதன் சிறப்பம்சம். இதுவே இந்தியாவில் இருக்கும் ஆலய மணிகளில் மிகப்பெரியதாக இருக்கும்” என்கிறார் பெருமையோடு.
அயோத்தி ராமர் கோயிலுக்கான இந்த மணி செய்ய சுமார் 21 லட்ச ரூபாய் ஆனது என்றும் இதைச் செய்துமுடிக்க 4 மாதங்கள் ஆனது என்றும் தெரிவித்துள்ளனர். இந்தப் பணியில் மொத்தம் 25 இந்து மற்றும் இஸ்லாமிய சகோதரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். ஒருமுறை இந்த மணியை அடித்தால் 15 கி.மீ தொலைவுக்குச் சத்தம் கேட்குமாம்.