தூத்துக்குடி மாவட்டத்தில் வீரமரணம் அடைந்த போலீஸ்காரர் சுப்பிரமணியனுக்கு, குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள 33 போலீஸ் நிலையங்களிலும் மரியாதை செலுத்தப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த கொலை வழக்கு ஒன்றில் தேடப்பட்ட துரைமுத்து என்ற ரவுடியை தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் பிடிக்க முயன்றனர். அப்போது, அந்த ரவுடி போலீசார் மீது நாட்டு வெடிகுண்டு வீசியதில் ஆழ்வார்திருநகரி போலீஸ் நிலைய போலீஸ்காரர் சுப்பிரமணியன் பரிதாபமாக இறந்தார்.

பணியின் போது வீரமரணம் அடைந்த போலீஸ்காரர் சுப்பிரமணியனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று குமரி மாவட்டம் உள்பட தமிழகத்தின் பல்வேறு போலீஸ் நிலையங்களில் நடைபெற்றது. அதன்படி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அவரது உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.

இந்த படத்துக்கு போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தலைமையில் மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கூடுதல் சூப்பிரண்டுகள் ஈஸ்வரன், மணிமாறன், துணை சூப்பிரண்டுகள் பீட்டர்பால் (நில அபகரிப்பு பிரிவு), வேணுகோபால் (நாகர்கோவில்), சாம்சன் வேதமாணிக்கம் (ஆயுதப்படை), தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கண்மணி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் தக்கலை பயிற்சி துணை சூப்பிரண்டு வடிவேல், இன்ஸ்பெக்டர் பார்வதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவசங்கர், மகேஷ்பூபதி, ஜெயகுமார் மற்றும் போலீசார் கலந்து கொண்டு, போலீஸ்காரர் சுப்பிரமணியன் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
இதேபோல் நாகர்கோவில் கோட்டார், நேசமணிநகர், ஆசாரிபள்ளம், வடசேரி உள்ளிட்ட குமரி மாவட்டத்தின் 33 போலீஸ் நிலையங்களிலும், 4 அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களிலும், மதுவிலக்கு அமல்பிரிவுகளிலும், துணை சூப்பிரண்டு அலுவலகங்களிலும் போலீஸ்காரர் சுப்பிரமணியனின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள ஒரு ஜவுளி நிறுவனம் மற்றும் மணிமேடை சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் பகுதி உள்ளிட்ட பல்வேறு தனியார் அமைப்புகள் சார்பில் போலீஸ்காரர் சுப்பிரமணியன் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்திய நிகழ்வுகளும் ஆங்காங்கே நடைபெற்றன.