கன்னியாகுமரி தொகுதி எம்பி வசந்தகுமார் மறைவையொட்டி அவரது சொந்த ஊரான அகஸ்தீஸ்வரம் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராகவும் தமிழக காங்., செயல் தலைவருமாகவும் இருந்தவர் ஹெச்.வசந்தகுமார் எம்பி. இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த 28 ம்தேதி மாலையில் அவர் உயிரிழந்தார். வசந்தகுமார் எம்.பி யின் மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓபிஎஸ், எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
அவரது உடல் அடக்கம் செய்வதற்காக நேற்று காலை 11.40 மணியளவில் ஆம்புலன்ஸ் மூலம் புறப்பட்டது. இந்நிலையில் அகஸ்தீஸ்வரத்தில் கடைகள் அனைத்தும் நேற்று காலை முதல் அடைக்கப்பட்டு ரோடுகள் மற்றும் வீடுகளில் கருப்பு கொடி கட்டப்பட்டு துக்கம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
கட்சி அலுவலகம் மற்றும் அவரது வீட்டிலும் வைக்கப்பட்டுள்ள அவரது புகைப்படத்திற்கு உறவினர்களும், தொண்டர்களும், ஊர்மக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் குமரி மாவட்ட பகுதிகளில் பெரிய அளவிலான கண்ணீர் அஞ்சலி பேனர்கள் வைக்கப்பட்டு அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அவரது உடல் சொந்த ஊரான அகஸ்தீஸ்வரம் பகுதியில் நல்லடக்கம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளநிலையில் அவரது தந்தை மற்றும் தாயாரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள அவரது சொந்த கல்லறைத் தோட்டத்தில் அவரது உடலும் நல்அடக்கம் செய்யப்படுவதற்கு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
அங்குள்ள முட்கள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு தண்ணீர் தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் அவரது வீடு அமைந்துள்ள பகுதிகளில் போலீசாரும், சுகாதாரத்துறையினரும் முகாமிட்டு ஆயத்தப்பணிகளை செய்து வருகின்றனர்.






0 Comments