விதிகளை மீறியதால், உத்தர பிரதேசத்தை சேர்ந்த பா.ஜ., எம்.பி., சாக் ஷி மஹராஜ், ஜார்க்கண்டில் கட்டாயமாக தனிமைப்படுத்தப்பட்டார்.ஜார்க்கண்டில், முதல்வர் ஹேமந்த் சோரன் தலையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்சாவின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
கொரோனா பரவலை தடுக்க, கடந்த மாதம், 17ல், மாநில அரசு பிறப்பித்த உத்தரவில், 'வெளி மாநிலங்களில் இருந்த ஜார்க்கண்ட்டுக்கு வருபவர்கள், தங்களை பற்றிய முழு விபரங்களை, 'ஆன்லைன்' வழியாக தெரிவிக்க வேண்டும். இல்லாவிடில், அவர்கள், 14 நாட்கள் தனிமை முகாமில் தங்க வைக்கப்படுவர்' என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம், உன்னாவ் தொகுதி பா.ஜ., - எம்.பி., சாக் ஷி மஹராஜ், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக, ஜார்க்கண்ட் மாநிலம், கிர்டிக் மாவட்டத்துக்கு வந்தார். ஆனால், இதுபற்றி அவர், மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிக்கவில்லை.நிகழ்ச்சியை முடிந்துவிட்டு, கிரிடிக்கிலிருந்து, தன்பாதுக்கு காரில் வந்துக் கொண்டிருந்தார். தன்பாதிலிருந்து, டில்லிக்கு, ரயிலில் பயணிக்கவும் திட்டமிட்டிருந்தார். ஆனால், தன்பாத் அருகே, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், சாக் ஷி வந்த காரை நிறுத்தி விசாரித்தனர்.

அப்போது, தன் வருகை பற்றி, மாவட்ட நிர்வாகத்திடம் சாக் ஷி எதுவும் தெரிவிக்கவில்லை என்பது தெரிந்தது.இதையடுத்து, தன்பாதில் அமைக்கப்பட்டுள்ள, தனிமை முகாமுக்கு சாக் ஷி அனுப்பிவைக்கப்பட்டார். அவர், அங்கு, 14 நாட்கள் தங்கியிருக்க வேண்டும் என, போலீசார் தெரிவித்தனர்.