மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமைத்திருத்தச் சட்டத்தை (சிஏஏ) கண்டித்து டில்லியில் உள்ள ஷாகீன் பாக் பகுதியில் போராட்டம் நடத்திய ஏராளமான முஸ்லிம்கள் பாஜ.,வில் இணைந்தனர்.
சிஏஏ எனப்படும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து டில்லியில் உள்ள ஷாகீன் பாக் பகுதியில் ஏராளமானோர் போராட்டம் நடத்தினர். இந்த வன்முறையாக வெடித்தது. இந்நிலையில், இந்த போராட்டத்தில் கலந்துக்கொண்ட ஏராளமான முஸ்லிம்கள், டில்லி பாஜ., மாநிலத் தலைவர் ஆதேஷ் குப்தா, தேசிய துணைத்தலைவரும் டில்லி பொறுப்பாளருமான ஷியாம் ஜாஜு ஆகியோர் முன்னிலையில் பாஜ.,வில் இணைந்தனர்.

குறிப்பாக போராட்டத்தில் தீவிரமான இருந்த சமூக செயற்பாட்டாளர் ஷாசாத் அலி, மருத்துவர் மீரான், ஆம்ஆத்மி கட்சியின் முன்னாள் நிர்வாகி தபாசம் ஹூசைன் உள்ளிட்டோரும் பாஜ.,வில் முறைப்படி தங்களை இணைத்துக்கொண்டனர்.

இதுகுறித்து பாஜ., தலைவர் ஆதேஷ் குப்தா கூறியதாவது: முஸ்லிம்கள் மீது பாஜ., எந்தவிதமான வேறுபாட்டையும் காட்டவில்லை. அவர்களைப் வளர்ச்சியின் மையத்துக்குள் கொண்டுவரத்தான் அரசு முயல்கிறது என்பதை உணர்ந்து, நூற்றுக்கணக்கான முஸ்லிம் சகோதர, சகோதரிகள் பாஜ.,வில் இணைந்திருப்பது புதிய உற்சாகத்தை தருகிறது.

முத்தலாக் சட்டத்தை பிரதமர் மோடி கொண்டுவந்தபின், கட்சியில் இணைந்த முஸ்லிம் பெண்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். இது மோடி அரசின் மீது அனைத்து மதத்தைச் சேர்ந்த மக்களுக்கும் நம்பிக்கையுள்ளதையே காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.பாஜ., டில்லி பொறுப்பாளர் ஷியாம் ஜாஜு கூறுகையில், 'சிஏஏ குறித்து பேச்சு எழுந்தபோது, சில அரசியல் கட்சிகள் முஸ்லிம் மக்களை தவறான பாதைக்கு திருப்பினர்.

ஆனால், யாரும் தேசிய அடையாளத்தை நிரூபிக்கத் தேவையில்லை என்பதை முஸ்லிம்கள் உணர்ந்துவிட்டார்கள். யாருடைய வாக்களிக்கும் உரிமையும், குடியுரிமையும் பறிக்கப்படாது. பாஜ., மூலம் தான் நீதி பெற முடியும் என்பதை உணர்ந்தபின், ஷாகீன் பாக் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்கள் பாஜ.,வில் இணைந்துள்ளனர்,' எனத் தெரிவித்தார்.