மறைந்த எம்.பி. வசந்தகுமார் உடலுக்கு காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தமிழக காங்கிரஸ்தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட தலைவர்கள், காங்கிரஸ்கட்சியினர், வர்த்தகர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
கரோனா தொற்று காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. எச்.வசந்தகுமார் (70), சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலமானார். தனியார் மருத்துவமனையில் இருந்து அவரது உடல் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்துக்கு நேற்று எடுத்து வரப்பட்டது. 

கே.எஸ்.அழகிரி கண்ணீர்

அங்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, கண்ணீர்மல்க வசந்தகுமார் உடலைப்பார்த்து இறுதி அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கூறும்போது, ''வசந்தகுமார் மறைவு காங்கிரஸ் கட்சிக்கு பேரிழப்பாகும். காமராஜரின் கொள்கைகளை கடைபிடித்து வந்த அவர்,தொழிலிலும், பொது வாழ்க்கையிலும் தலைசிறந்தவராக திகழ்ந்தார். அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்'' என்றார். தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் அஞ்சலிக்காக உடல்வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சொந்த ஊருக்கு நேற்றே உடலை எடுத்துச் செல்வதால், அத்திட்டம் மாற்றப்பட்டு, காமராஜர் அரங்கத்துக்கு உடல் கொண்டு வரப்பட்டு,சுமார் 10 நிமிடங்கள் வைக்கப்பட்டது.

முகுல் வாஸ்னிக் அஞ்சலி

அங்கு காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக், வசந்தகுமார் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். அவர் கூறும்போது, ''வசந்தகுமார் உறுதிமிக்க தலைவராக இருந்தவர். சோனியாகாந்திக்கு நெருக்கமான தலைவராக திகழ்ந்தார். கடின உழைப்புக்கு சொந்தக்காரர். அவரது மறைவு காங்கிரஸ் கட்சிக்கு பேரிழப்பாகும்'' என்றார். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, சு.திருநாவுக்கரசர் எம்.பி., பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். உறவினர்கள், நண்பர்கள், வர்த்தகர்கள், வசந்த் அன் கோ மற்றும் வசந்த் டிவி ஊழியர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் வசந்தகுமார் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

வசந்தகுமாரின் மகனும், நடிகருமான விஜய் வசந்த் கூறும்போது, ''தந்தையின் மறைவு எங்கள்குடும்பம், தொழில் சார்ந்தவர்களுக்கு மட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சிக்கு பேரிழப்பாகும். 30-ம் தேதி (இன்று) முழு ஊரடங்கு என்பதால், சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் நடக்கும் இறுதிச் சடங்கில்குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொள்வார்கள்'' என்றார்.

சென்னையில் காங்கிரஸ் கட்சியினர், வர்த்தகர்கள், பொதுமக்களின் அஞ்சலிக்குப் பிறகு, பகல் 11.45 மணி அளவில் வசந்தகுமார் உடலுடன் ஆம்புலன்ஸ் வாகனம், அவரது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் கிராமத்துக்கு புறப்பட்டது.

சோகத்தில் குமரி, நெல்லை, தூத்துக்குடி மக்கள்

எம்.பி. வசந்தகுமாரின் உடல் அவரது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் இன்று காலை அடக்கம் செய்யப்படுகிறது.

சென்னை தி.நகரில் உள்ள இல்லம் மற்றும் காமராஜர் அரங்கத்தில் எம்.பி. வசந்தகுமாரின் உடலுக்கு பல்வேறு தலைவர்கள், காங்கிரஸ் தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் நேற்று அஞ்சலி செலுத்தினர். இதன் பிறகு, சென்னையில் இருந்து அவரது உடல் ஆம்புலன்ஸில் கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரத்துக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு உள்ள குடும்ப தோட்டத்தில் வசந்தகுமாரின் பெற்றோர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகளின் அருகிலேயே, அவரது உடல் இன்று காலை 10 மணி அளவில் அடக்கம் செய்யப்படுகிறது.

உடல் அடக்கத்தில் தமிழிசை பங்கேற்பு

இதில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் வேணுகோபால் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இதையொட்டி, அகஸ்தீஸ்வரத்தில் நேற்று காலை முதலே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வசந்தகுமார் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று 1 மணி நேரம் கடைகளை அடைத்து வியாபாரிகள் அஞ்சலி செலுத்தினர். நாகர்கோவிலில் நேற்று மாலை அனைத்து கட்சியினர் பங்கேற்ற மவுன ஊர்வலம் நடந்தது. குழித்துறையில் இருந்து மார்த்தாண்டம் வரை இன்று மாலை மவுன அஞ்சலி ஊர்வலம் நடக்கிறது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு நகரங்கள், கிராமங்களிலும் ஆங்காங்கே வசந்தகுமார் கண்ணீர் அஞ்சலி பேனர்கள் வைத்து மக்கள் தங்கள் சோகத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.