செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் அரசு பேருந்துகள் இயக்கப்படுமா? என்ற கேள்வி கூலித்தொழிலாளர்கள், விவசாயிகள் மத்தியில் பரவலாக உருவெடுத்துள்ளது.
மத்திய மாநில அரசுகள் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அமல்படுத்திய ஊரடங்கு உத்தரவால் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மூடப்பட்டது. அரசு பேருந்துகள் தொடர்ந்து 40 நாட்கள் இயக்கப்படவில்லை. ஆனால் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் பணிபுரியும் பணியாளர்களுக்கு மட்டும் இயக்கப்பட்டது.

தொடர்ந்து இன்னிலை 40 நாட்கள் நீடித்தது. ஊரடங்கு தளர்வுக்குப்பின் கன்னியாகுமரி மாவட்டத்தில் போக்குவரத்து துறை சார்பில் சுமார் 30சதவீதம் பேருந்துகள் இயக்கப்பட்டது. பஸ் பயணிகள் அரசு விதிமுறைகளை கடைபிடிக்காமல் பயணித்தனர். இதனால் கொரோனா வைரஸ் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போனது.

மீண்டும் பேருந்துகள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டது. அதிகாலையில் விவசாய நிலங்களுக்கு செல்லும் விவசாயிகள் கூலித்தொழிலாளர்கள் சிறு குறு வியாபாரிகள் அதிக அளவு சிரமப்பட்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் குழித்துறை 2, நாகர்கோயில் 3, மார்த்தாண்டம், குளச்சல், திங்கள்சந்தை, செட்டிகுளம், விகேபுரம், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் தலா ஒரு பணிமனை உட்பட 12 பணிமனைகள் உள்ளன. இந்த பணிமனைகள் வழி 450 பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிகிறது. சுமார் 1500க்கு மேற்பட்ட டிரைவர்கள் கண்டெக்டர்கள் பணிபுரிய‌ தயாராக உள்ளனர்.

வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை பெருக்கிக்கொள்ள பஸ் போக்குவரத்து பயனுடையதாக இருக்கும். ஆகையால் செப்டம்பர் 1ம் தேதி முதல் அரசு பஸ்கள் இயக்கப்பட்டால் அது அனைவருக்கும் நன்மையை உருவாக்கும். அதேவேளையில் பஸ்ஸில் பயணிக்கின்றவர்கள் அரசு விதிமுறைகளை ஏற்று செல்ல வேண்டுமென்று நடத்துனர்கள் விரும்புகின்றனர்.

செப்டம்பர் ஒன்றாம் தேதி அல்லது 6ம் தேதி முதல் அரசு பஸ்கள் இயக்கப்படுமா ? என்ற கேள்வி கூலித் தொழிலாளர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் எழுப்பி உள்ளனர். பஸ்கள் இயக்கப்பட்டால் அரசு விதிமுறைகளை கடைபிடித்து பயணிகள் பயணித்தால் கொரோனா வைரஸ் தொல்லையை கட்டுப்படுத்த முடியும் இல்லையென்றால் அதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என பொதுமக்கள் தரப்பில் பேசப்படுகிறது.