கேரள மாநில நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பலத்த மழை பெய்து வருகின்றது. இதனால் ராஜமலை என்ற பகுதியில் தேயிலை எஸ்டேட்டில், பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 40 குடும்பத்தை சேர்ந்த சுமார் 90க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
கடந்த 3 நாட்களாக இடைவிடாது பெய்யும் கனமழையால் மண் இளகி, நிலச்சரிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதை அடுத்து, போலீசாரும், தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்தில் முகாமிட்டு மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் உடனடியாக வரவழைக்கப்பட்டு, மண்ணுக்குள் புதையுண்டவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மண்ணுக்குள் புதையுண்டவர்களுக்கு அவசர சிகிச்சை அளிக்கும் வகையில், அங்கு மருத்துவக் குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர்.
இந்நிலையில் இன்றை மீட்புபணியில் இதுவரை 15 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் மொத்த எண்ணிக்கை தற்போது 42 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 15 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தற்போது மழை குறைந்துள்ளதால் மீட்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு மீதமுள்ள 36 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இதனிடையே நிலச்சரிவு குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் தொலைப்பேசியில் பேசிய தமிழக முதல்வர் பழனிசாமி, மீட்பு பணிக்கான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






0 Comments