குளச்சல் அருகே உள்ள வாணியக்குடியில் பெண் உள்பட 6 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதைத்தொடர்ந்து வாணியக்குடியில் 385 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. 4 இடங்களில் தெருக்கள் அடைக்கப்பட்டு போலீஸ் முகாம் அமைக்கப்பட்டது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள வீட்டில் இருந்த 75 வயது முதியவர் கடந்த மாதம் 9-ந் தேதி திடீரென உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு நடந்த பரிசோதனையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் வாணியக்குடியில் அடைக்கப்பட்ட 2 இடங்களில் உள்ள தடைகளை கடந்த 20-ந்தேதி பொதுமக்கள் அகற்றினர். தகவல் அறிந்து வருவாய் மற்றும் காவல் துறை அதிகாரிகள் விரைந்து சென்றனர். அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். அதன்பின்தான் தெருக்களில் தடை நீக்கப்படும் என அதிகாரிகள் கூறினர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து தடை அகற்றிய இடத்தில் போலீசார் ‘பேரி கார்டு‘வைத்தனர்.
அதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் வாணியக்குடி பொதுமக்கள் கொரோனா பரிசோதனைக்கு ஒத்துழைக்க வேண்டும் என கூறினார். இந்த நிலையில் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் வாணியக்குடியில் மீனவர்களுக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டது. முட்டம் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் பிரதீப் குமார் தலைமையிலான குழுவினர் 45 மீனவர்களுக்கு சளி மாதிரி எடுத்தனர். குளச்சல் உதவி சூப்பிரண்டு விஸ்வேஸ் பி.சாஸ்திரி தலைமையில் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அப்போது அங்கு கல்குளம் தாசில்தார் ஜெகதா, வருவாய் ஆய்வாளர் பிந்து, இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி ஆகியோர் இருந்தனர்.






0 Comments