கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் இறப்பு விகிதம் அதிகம் உள்ளதாக 16 மாவட்டங்களின் பெயர்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்தின் எட்டு மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் தினமும் சராசரியாக 6 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. ஆனால் அது தற்போது குறைந்தது 5000 என்ற அளவில் குறைந்துள்ளது. கொரோனா நோய்த்தொற்று 6000-லிருந்து 5000-மாக குறைந்து இருப்பது ஆறுதலான விஷயம் என்றாலும் உயிரிழப்போர் எண்ணிக்கை தமிழகத்தில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

தற்போது அன்றாடம் கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கை 100 முதல் 120 வரை என்ற அளவில் உள்ளது. சென்னையை தவிர்த்த பிற மாவட்டங்களில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. மத்திய மற்றும் மாநில இறப்பு விகிதங்கள் பொறுத்தவரை தமிழகத்தின் 8 மாவட்டங்களின் இறப்பு விகிதம் அதிகம் உள்ளது தெரியவந்துள்ளது.

இதன்படி, தேசிய அளவில் இறப்பு விகிதம் 2.04 சதவீதமாக உள்ளது. தமிழகத்தில் இறப்பு விகிதம் 1.64 சதவீதமாக உள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா முழுவதும் 16 மாவட்டங்களில் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது தெரியவந்துள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 8மாவட்டங்கள் உள்ளன.

ஆனால் இந்த எட்டு பகுதிகளை காட்டிலும் சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தேனி, திருவள்ளூர், திருச்சி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. சென்னையில் மட்டும் 2,272 பேர் மரணமடைந்துள்ளனர். இதன்வழி இறப்பு விகிதம் 2.12 சதவீதமாக உள்ளது.

மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 276 பேர் மரணமடைந்துள்ளனர். இதன் இறப்பு விகிதம் 1.68 சதவீதமாக உள்ளது. விருதுநகரில் 116, காஞ்சிபுரத்தில் 142, தேனியில் 66, ராணிப்பேட்டையில் 45 பேரும் உயிரிழந்துள்ளனர். எனவே இந்த 8 மாவட்டங்களின் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக மத்திய அரசு சிகிச்சை முறைகளை முறையாக பின்பற்றி இறப்பு விகிதங்களை குறைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.