கொரோனாவுக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள 'கோவிஷீல்டு' தடுப்பூசி 2021 ஆம் ஆண்டு சுமார் 10 கோடி பேருக்கு தலா ரூ.250 விலையில் கிடைக்கும் என சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளன.
இதில், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ரா ஜெனேகா மற்றும் நோவாவேக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து 'கோவிஷீல்டு' என்ற கொரோனாவுக்கு எதிராக ஒரு தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளது. இந்த மருந்திற்கான உரிமத்தைப் பெற்றுள்ள புணேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்துக்கு 2-ஆம் மற்றும் 3-ஆம் கட்ட பரிசோதனைகளை நடத்த இந்திய தரநிர்ணய கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில், மருந்து தயாரிப்பை துரிதப்படுத்த, சீரம் இன்ஸ்டிடியுட் ஆப் இந்தியா நிறுவனம், கவி(Gavi) மற்றும் கேட்ஸ் பவுண்டேஷன் நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தமிட்டுள்ளது. அதன்படி, 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் உள்ள 10 கோடி பேருக்கு தோராயமாக ரூ. 250 (3 டாலர்) ரூபாயில் வழங்குவதாக தெரிவித்துள்ளது. இதற்கான தயாரிப்புப் பணிகள் வருகிற அக்டோபர் மாதம் தொடங்கும் என்று தெரிகிறது. முன்னதாக அடுத்தகட்ட பரிசோதனைகளும் சில தினங்களில் நடத்தப்பட உள்ளன.