கேரளாவில் சொத்திற்காக இளைஞர் ஒருவர், தனது குடும்பத்தினரை விஷம் வைத்து கொல்ல முயன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் காசர்கோடு அருகேயுள்ள அரிங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பென்னி - பெஸ்ஸி தம்பதி. இவர்களுக்கு ஆன் மேரி என்ற மகளும் (16 வயது) ஆல்பின் ( 22) என்ற மகனும் உள்ளார். ஐ.டி.ஐ படிப்பை முடித்துள்ள ஆல்பின், வேலைக்கு செல்லாமல் விட்டிலேயே இருந்துள்ளார். இதன் காரணமாக அவரது பெற்றோரும் தங்கையும் கண்டித்துள்ளனர்.
இதனால் பெற்றோர் மீதும், தங்கை மீதும் கடும் கோபத்தில் இருந்த ஆல்பின், அவர்கள் மூவரையும் கொலை செய்யத் திட்டம் தீட்டினார்.
இதையடுத்து, கடந்த ஜூலை 31- ந் தேதி வீட்டில் கோழி கறி சமைத்த நிலையில், அதில் எலி மருந்தைக் கலந்து வைத்துள்ளார். ஆனால் அதில் குறைந்த அளவுக்கு மட்டுமே எலி மருந்து கலக்கப்பட்டதால், ஆல்பினின் பெற்றோர் மற்றும் அவரது தங்கைக்கு வயிற்று வலி மட்டும் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் உயிர் தப்பினார்கள். இந்த முயற்சி தோல்வியடைந்தது ஆல்பினை மேலும் கோபப்படுத்தியுள்ளது. தனது அடுத்த முயற்சியில் கண்டிப்பாக மூவரையும் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்த ஆல்பின், இணையத்தில் விஷம் வைப்பது குறித்து தேடியுள்ளார்.
இந்த சூழலில் கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி சகோதரி ஆன் மேரி, வீட்டிலேயே ஐஸ்கிரீம் தயார் செய்துள்ளார். தாயும், மகளும் சேர்ந்து தயார் செய்த அந்த ஐஸ்கிரீமை, குளிர்பான பெட்டியில் வைத்த போதுதான் தனது 2வது திட்டத்தை நிறைவேற்றியுள்ளார் ஆல்பின். குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ஐஸ்கிரீமில் அவர் எலி மருந்தை கலந்துள்ளார். இது அறியாத சகோதரியும், அவரது தந்தை பென்னும் சாப்பிட்டுள்ளனர். அப்போது ஆல்பின் தனக்கு தொண்டை சரியில்லை எனக்கூறி ஐஸ்கிரீமை சாப்பிட மறுத்துள்ளார். அவரது தாயும் அது சுவை இல்லை எனக்கூறி நாய்க்கு கொடுத்துள்ளார்.
இதனால் ஆகஸ்ட் 5ம் தேதி ஆன் மேரிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அப்போதே ஆன் மேரியின் தந்தைக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் ஆன் மேரியின் மரணத்தில் சந்தேகமடைந்த போலீசார் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பினர். அதில் விஷம் வைத்து கொள்ளப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரின் குடும்பத்தினரிடன் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் சகோதர் மற்றும் தாயின் செல்போன்களை வாங்கி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஆல்பினின் செல்போனில் இருந்த கூகுல் தேடலை பார்த்ததில் அவர்களது வீட்டிலேயேதான் குற்றவாளி இருப்பது தெரியவந்தது.
இது குறித்து தெரிவித்துள்ள போலீசார், ஆல்பின் தனது விருப்பம் போல வாழ ஆசைப்பட்டதாகவும், சொத்துக்கள் அனைத்தும் தனக்கே வர வேண்டும் என்ற காரணத்திற்காக தங்கை உட்பட மூன்று பேரையும் தீர்த்துக்கட்ட முயற்சிகளை எடுத்துள்ளான் என தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






0 Comments