கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொலை செய்த மர்ம கும்பல் ஒன்று அவரது நகைகளை கொள்ளை திருடிவிட்டு தப்பிச் சென்ற நிலையில், அந்த சம்பவத்தில் பெண்ணின் மாமியாருக்கு தொடர்பு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பகுதியில் செல்வபாண்டின் (26), பிரகதி மோனிகா (24) தம்பதி வசித்து வந்தனர். அவர்களுக்கு ஒன்றரை மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி பிரகதி மோனிகா வீட்டில் தனியாக இருந்த போது, வீட்டுக்குள் புகுந்த மர்ம கும்பல், இளம்பெண்ணை கொலை செய்துவிட்டு தாலி, ஒரு பவுன் தங்கச்சங்கிலி ஆகியவற்றை திருடிவிட்டு தப்பிச் சென்றது. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியை சேர்ந்த ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் காவல்துறையினர் திருத்தங்கல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, கோடீஸ்வரன் (20), டைசன் என்கிற சேகர் (19) ஆகிய இருவரையும் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
பட்டாசு ஆலையில் வேலை செய்து வந்த தங்களுக்கு போதிய பணம் இல்லாததால் பிரகதி மோனிகாவின் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக கூறினர். மேலும் இந்த கொலையில் இளம் பெண்ணின் மாமியார் பரமேஸ்வரிக்கும் (40) தொடர்பு இருப்பதாக வாக்குமூலம் அளித்தனர். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் பரமேஸ்வரியை கைது செய்தனர். இறந்த பெண்ணின் வீட்டில் இருந்து அரிவாள், தங்க நகைகளையும், டைசன் என்கின்ற சேகரிடமிருந்து தாலியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.