குமரி மாவட்டத்தின் மேற்கு கடல் பகுதிகளான அரபி கடலில் 45 நாட்கள் மீன் பிடி தடைக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று குமரி மேற்கு பகுதிகளிலிருந்து நள்ளிரவு மற்றும் இன்று அதிகாலையில் ஆயிரத்திற்கு மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க புறப்பட்டனர்.
தமிழகத்தில் மீன்களின் இன பெருக்கு காலத்தில் கிழக்கு ஆழ் கடல் பகுதிகளில் கடந்த எப்ரல் மாதம் தொடங்கி 45 நாட்கள் விசைப்படகுகளுக்கு மீன் பிடி தடைகாலம் கடைபிடிக்கப்பட்டது.

இதே போன்று குமரி மாவட்டத்தின் மேற்கு கடல் பகுதிகளான அரபி கடல் பகுதிகளில் அதாவது குமரி மாவட்டம் முட்டம், குளச்சல் முதல் கேரளா உள்பட குஜராத் வரை உள்ள அரபி கடலில் கடந்த ஜூன் மாதம் 15ம் தேதி முதல் மீன் பிடி தடை காலம் தொடங்கியது.

நேற்றுடன் 45 நாட்கள் மீன் பிடி தடைகாலம் முடிவடைந்தது. இதை தொடர்ந்து நேற்று நள்ளிரவு மற்றும் இன்று அதிகாலை முதல் மீனவர்கள் மீண்டும் மீன் பிடிக்க கடலுக்கு புறப்பட்டனர். கன்னியாகுமரி மேற்கு பகுதியில் அமைந்துள்ள முட்டம், குளச்சல், தேங்காப்பட்டணம் மீன் பிடி துறைமுகங்களிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் உற்சாகமாக புறப்பட்டு சென்றனர். கடலில் ஏற்பட்ட சூறைக்காற்று, கொரோனா மீன்பிடி தடைக்காலம் என நான்கு மாதங்களுக்கு மேலாக வீடுகளில் முடங்கி வருமானமின்றி மீனவர்கள் தவித்துக் கொண்டிருந்தனர்.

இந்தநிலையில், தற்போது பெரும் எதிர்பார்ப்புடன் ஆழ்கடலுக்கு புறப்பட்டனர். இவர்கள் ஒரு வாரம் முதல் 20 நாட்கள் வரை ஆழ்கடலில் தங்கியிருந்து மீன் பிடித்து கரை திரும்ப உள்ளனர்.