'முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில், எந்த முன்னேற்றமும் இல்லை. அவருக்கு, 'வென்டிலேட்டர்' உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது' என, மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு, 10ம் தேதி, திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து, டில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில், அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது.இதையடுத்து நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில், பிரணாப் முகர்ஜியின் மூளையில், ரத்தக்கட்டு இருந்தது தெரிய வந்தது. உடனடியாக நடத்தப்பட்ட அறுவை சிகிச்சை மூலம், அந்த ரத்தக்கட்டு அகற்றப்பட்டது.

இந்நிலையில், அவரது உடல்நிலை குறித்து, மருத்துவமனை நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில், எந்த முன்னேற்றமும் இல்லை. தீவிர சிகிச்சை பிரிவில், வென்டிலேட்டர் உதவியுடன், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்' என, கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பிரணாப் முகர்ஜியின் மகள், ஷர்மிஷ்டா முகர்ஜி, 'டுவிட்டரில்' வெளியிட்ட பதிவில், 'சிறு வயதில், என் தந்தையும், என் மாமாவும், சுதந்திர தினத்தன்று, தங்கள் வீட்டு மாடியில், தேசியக் கொடியை ஏற்றுவார்கள். 'எனக்கு தெரிந்து, அவர் எந்த சுதந்திர தினத்தன்றும், தேசியக் கொடி ஏற்றாமல் இருந்ததில்லை. அடுத்த ஆண்டு நிச்சயம் ஏற்றுவார் என நம்புகிறேன்' என, கூறியுள்ளார்.