தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாதிப்புக்குள்ளாகிய தொற்றாளர்கள் தனியார் மருத்துவமனையை நம்பி செல்கின்றனர். கொரோனாவுக்கு சிகிச்சையே இல்லாத நிலையில் தனியார் மருத்துவமனைகள் பரிசோதனை, பிபிடி கிட் பெயரில் பல லட்சங்களை கொள்ளை அடிப்பதாக புகார் எழுந்தது.

சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனை வெறும் 5 லட்சம் என்று அட்மிட் நேரத்தில் சொல்லி விட்டு மீதி, 11 லட்சத்தை கொடுத்தால்தான் டிஸ்சார்ஜ் செய்வோம் என்று அடாவடி காட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதே போல் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள சிட்டி மருத்துவமனையில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக அரசுக்கு தொடர் புகார்கள் வந்து கொண்டே இருந்தன. இதைத் தொடர்ந்து அந்த மருத்துவமனையில் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது நோயாளி ஒருவரிடம் இருந்து ரூ.7.4 லட்சம் வசூலிக்கப்பட்டது உறுதியானது. ரூ.7.4 லட்சத்துக்கு என்ன என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்று ஆய்வு செய்தனர். அப்போது அரசு வழங்கிய வழிகாட்டு நெறிமுறைகளை தூக்கி தூரப்போட்டு அவர்களாக ஒருமாதிரியான சிகிச்சை வழங்கியிருப்பது தெரிந்தது.
மேலும் சிறப்பு மருந்துகள் எதையும் அந்த மருத்துவமனை பயன்படுத்தாததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கூடுதல் கட்டணம் வசூலித்த சிட்டி மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட கொரோனா சிகிச்சை அளிப்பதற்கான அனுமதியை ரத்து செய்ய கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் சிட்டி மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட கொரோனா சிகிச்சை அனுமதியை விருதுநகர் கலெக்டர் கண்ணன் ரத்து செய்து உத்தரவிட்டார்.






0 Comments