குமரி மாவட்டத்தில் நேற்று மணவாளக்குறிச்சி முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் உட்பட 3 பேர் கொரோனா தொற்றால் பலியாகியுள்ளனர். கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்று மட்டும் 140 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது பாதிப்பு எண்ணிக்கை 6,715 ஆக அதிகரித்துள்ளது. தினமும் புதிது, புதிதாக தொற்று பாதித்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கடலோர கிராமங்களில் மீண்டும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு நடமாடும் சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம், சளி மாதிரி சேகரிப்பு காரணமாக தொற்று கூடி வருகிறது.
அதேவேளையில் குணமடைந்தவர்கள் எண்ணிகையும் அதிகரித்து வருகிறது. ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் கோவிட் 19 மையங்கள், தனியார் மருத்துவமனை என தற்போது 1,500 பேர் சிகிச்சையில் உள்ளனர். தொற்று இல்லாத கிராமங்கள் இல்லை என்ற நிலை குமரி மாவட்டத்தில் உருவாகி உள்ளது.
நோய் தொற்று உள்ளவர்களின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கும் பரிசோதனை நடந்து வருகிறது. காவல்துறையை சேர்ந்தவர்களும் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
நேற்று நேசமணி நகரை சேர்ந்த 73 வயது முதியவர், திருவட்டார் அருகே உள்ள கண்ணூர் பகுதியை சேர்ந்த 40 வயது ஆண், மணவாளக்குறிச்சி பேரூராட்சி சின்னவிளை பகுதியை முன்னாள் கவுன்சிலர் ஆகியோர் கொரோனாவுக்கு பலியாகினர்.
குமரி மாவட்டத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது. ஆரல்வாய்மொழியில் உள்ள குமரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலையில் 400 பேருக்கு சளி மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 150 பேரின் பரிசோதனை முடிவுகள் நேற்று வந்தது.
இதில் 15 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுபடி, நூற்பாலை மூடப்பட்டுள்ளது.






0 Comments