குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உயிரிழப்புகளும் ஒவ்வொரு நாளும் நிகழ்ந்து வருகிறது.

ஏற்கனவே 52 பேர் மரணம் அடைந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மதியம் வரை மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இறச்சகுளம் பகுதியை சேர்ந்த 65 வயது பெண், கோட்டார் செட்டித்தெருவை சேர்ந்த 70 வயது முதியவர், பெருவிளை பகுதி 58 வயது ஆண், வள்ளலார்தெரு 72 வயது ஆண் என உயிரிழந்துள்ளனர்.
நேற்று மதியம் மேக்காமண்டபம் பகுதியை சேர்ந்த 54 வயது ஆண் இறந்தார். இதையடுத்து இறந்தவர்களின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் ஏற்கனவே வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு இருந்தவர்கள் என டாக்டர்கள் கூறினர்.
மாவட்டம் முழுவதும் பரிசோதனை எண்ணிக்கை 90 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாகர்கோவில் மாநகராட்சியில் 1000 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். காவல்துறையிலும் பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. ஏற்கனவே தொற்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர்கள், உறவினர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
தினமும் 200 ஐ கடந்து வந்த பாதிப்பு கடந்த இருநாள்களாக 130, 150 என உள்ளது. நேற்று மாவட்டம் முழுவதும் 151 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். கன்னியாகுமரி பஞ்சலிங்கபுரம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆட்டோ டிரைவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
அதனை தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்த 11 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் நேற்று இரவு 4 பேருக்கு தொற்று உறுதியானது. இதுபோல் கொட்டாரம் அகதிகள் முகாமில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட ஒருவருக்கு நேற்று இரவு தொற்று உறுதியானது. இவர்கள் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.






0 Comments