குமரி மாவட்டம் இரவிபுத்தன்துறையை சேர்ந்தவர் சூசைராஜ் (வயது 40). ஆண்டனி, தினேஷ், ராஜன் ஆகிய நான்கு மீனவர்கள் கடலூர் மாவட்டத்தில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

இவர்கள் நேற்று காலை 4 மணியளவில் சிவகுமார் என்பவரின் விசைபடகில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். இவர்களுடன் அந்த பகுதியை சேர்ந்த சுரேஷ், ராமலிங்கம், தினகரன், மாரியப்பன் ஆகிய 4 மீனவர்களும் சென்றுள்ளனர்.
படகு சுமார் 6 கடல் மைல் தொலைவில் சென்று கொண்டிருந்தபோது, சூசைராஜை காணவில்லை. உடனே படகை நிறுத்தி மாயமான சூசைராஜை சக மீனவர்கள் தேடினர். கடலில் நீரோட்டம் அதிகமாக இருந்ததால் கண்டுபிடிக்க முடியவில்லை.
தகவலறிந்து அந்த பகுதியில் உள்ள மீனவர்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். நேற்று மாலை வரை சூசை ராஜ் கிடைக்கவில்லை. இது சம்பந்தமாக உடன் சென்ற மீனவர்கள் இரவிபுத்தன்துறை மீனவ கூட்டுறவு சங்க தலைவர் டில்லியான்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து டில்லியான்ஸ், மாயமான சூசை ராஜை கண்டு பிடிக்க வேண்டும் என முதலமைச்சர், மீன்வளத்துறை அமைச்சர், குமரி மாவட்ட மீன்வளத்துறை அதிகாரி ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். சூசைராஜுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.






0 Comments