கன்னியாகுமரி மாவட்டத்தில் தபால் நிலையங்கள் மூலம் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி புதிய கணக்கு துவங்குவதற்கான சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது
இந்திய அஞ்சல் துறையின், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி அனைத்து கிராமப்புற மக்களுக்கும் வங்கி சேவை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 2018 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 ம் தேதி துவங்கப்பட்டது. வரும் செப்டம்பர் மாதம் 1 ம் தேதியன்று இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி, 2 வது ஆண்டு சேவையை நிறைவு செய்து 3 ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அதனையொட்டி, ஆகஸ்ட் மாதம் ஒவ்வொரு புதன் கிழமை அன்றும், கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கிளை, துணை மற்றும் தலைமை அஞ்சலகங்களிலும், இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியின் புதிய கணக்குகளை துவங்குதல் மற்றும் ஆதார் மூலம் பிற வங்கி கணக்குகளில் பண பரிவர்த்தனை வீட்டிலிருந்தபடியே பெற சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்

குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்க வேண்டிய அவசியம் இல்லை. வீட்டு வாசல் வங்கி சேவை உங்கள் பகுதி தபால்காரர் மூலம் வீட்டிலேயே பணம் எடுத்தல், பணம் செலுத்துதல் உள்ளிட்ட அனைத்து வங்கி சேவைகளையும் பெறும் வசதி, பணப் பரிமாற்றம் செய்யும் வசதி, மின்சாரம், தொலைபேசி, கடன் தவணை, பிரீமியம் மற்றும் பல கட்டணங்கள் செலுத்தும் வசதி, அனைத்து பரிவர்த்தனைகளும் கை ரேகை அல்லது ஓடிபி அடிப்படையில் நடைபெறுவதால் நம்பகத்தன்மை கொண்டது.அனைத்து அரசு ஓய்வூதியங்கள் , மானியங்கள், ஊக்கத்தொகைகள், நூறு நாள் வேலை திட்ட ஊதியம் இதன் மூலம் பெறலாம்.

கணக்கு துவங்கும் அனைவருக்கும் துரித சேவைக்கான கியுஆர் அட்டை வழங்கப்படும்.இதன் மூலம் அனைத்து தபால் அலுவலகத்திலும் வங்கி சேவை பெற முடியும். மொபைல் பாங்கிங் வசதி, பயனாளிகள் தங்கள் மொபைல் மூலம் தங்களுடைய கணக்கில் இருந்து இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் பண பரிமாற்றம் செய்யலாம். மேலும் தபால் துறை சேவைகளான செல்வமகள் சேமிப்பு திட்டம், ஆர்டி, பிபிஎப் ஆகிய கணக்குகளுக்கும் தபால் நிலையம் செல்லாமலே பணம் செலுத்தும் வசதி உள்ளது. ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட எந்தவொரு வங்கி கணக்கில் இருந்தும், வேறு எந்த ஆவணங்களும் இல்லாமல், ஆதார் எண்ணை மட்டும் பயன்படுத்தி தபால் அலுவலகத்திலோ அல்லது தபால்காரர் மூலமாகவோ பணம் பெற முடியும்.

உதவி தொகை, நூறு நாள் வேலை திட்ட ஊதியம் மற்றும் அரசின் பிற நேரடி மானியங்கள் பெறுபவர்கள் தொலைவில் உள்ள வங்கிகள் மற்றும் ஏடிஎம் க்கு சென்று சிரமப்பட தேவை இல்லை அல்லது வங்கி முகவர்கள் வரும் நாள் வரை காத்திருக்க தேவை இல்லை. உங்கள் பகுதி தபால் காரர் மற்றும் தபால் அலுவலகத்திலேயே பணம் எடுத்து கொள்ளலாம். பொதுமக்கள் இந்த வசதியை பெற்று, பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு தங்கள் அருகில் உள்ள தபால் அலுவலகத்தை அணுகலாம். கூடுதல் தகவல்களுக்கு 9944667493 , 04652-230493 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று கன்னியாகுமரி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கணேஷ் குமார் தெரிவித்துள்ளார்.