கடல் மீன்வள மேலாண்மை வரைவு அறிக்கை மசோதாவை நிறைவேற்றக்கூடாது என்று திமுக மீனவா் அணி வலியுறுத்தியுள்ளது.
திமுக மீனவா் அணி சாா்பில் மறைந்த திமுக தலைவா் கருணாநிதியின் 2 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி, காணொலி மூலமாக வியாழக்கிழமை நடைபெற்றது. மாநிலச் செயலா் முன்னாள் எம்எல்ஏ இரா.பொ்ணாா்டு தலைமை வகித்தாா். துணை அமைப்பாளா்கள் முன்னாள் எம்எல்ஏ மதிவாணன், அருமைராசகோபால்,பொன்னரசு, தம்பிதுரை ஆகியோா் கலந்து கொண்டனா். கூட்டத்தில், கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

நீட் தோ்வு முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி வருதல், கடல் மீன்வள மேலாண்மை வரைவு அறிக்கை மசோதாவை கொண்டுவர முயற்சிக்கு மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது. இந்திய ஆழ்கடல் எல்லைக்குள் வெளிநாட்டு மீன்பிடி கப்பலுக்கு அனுமதி வழங்கக்கூடாது. மீன்பிடித் தடைக்காலத்தில் அன்னிய கப்பல்களுக்கு நமது பொருளாதார மண்டலத்தில் மீன்பிடிக்க அனுமதிக்க நினைக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டிப்பது என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் இதில் நிறைவேற்றப்பட்டன.