சிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 286வது ரேங்க் பெற்று வெற்றியடைந்து சாதனை புரிந்துள்ளார் மதுரையை சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளிப் பெண்.
மதுரை மாவட்டம் சிம்மக்கல் பகுதியை சேர்ந்த தம்பதியினர் முருகேசன் மற்றும் ஆவுடைதேவியின் மகள் பூரண சுந்தரி. அவருக்கு 5 வயதில் பார்வை நரம்பு சுருங்கியதால் பார்வையை இழந்துள்ளர். எனினும் முடங்கிவிடாமல் தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதி ஒவ்வொரு வகுப்பிலும் அதிக மதிப்பெண்களை எடுத்துவந்துள்ளார் பூரண சுந்தரி.

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 471 மதிப்பெண்ணும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 1092 மதிப்பெண்களும் பெற்ற பூரண சுந்தரி, ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். கல்வி மீது தீராத ஆசையும் பொதுமக்களுக்கு சேவை செய்யவேண்டும் எனவும் நினைத்த பூரண சுந்தரி, போட்டித்தேர்வுகளுக்கு தன்னைத் தயார்படுத்திக்கொண்டு 2016ம் ஆண்டு முதல் பல்வேறு போட்டித்தேர்வுகளை எழுதத்தொடங்கியுள்ளார்.
அதன்பலனாக கடந்த 2018ம் ஆண்டு வங்கித் தேர்வில் வெற்றி பெற்று அரசு ஊரக வளர்ச்சி வங்கியில் பணியில் சேர்ந்தார். வங்கியில் பணியாற்றிக் கொண்டே சிவில் சர்வீஸ் தேர்வுகளையும் எழுதத்தொடங்கியுள்ளார். இந்த நிலையில், கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் பங்கேற்று இந்திய அளவில் 286 வது இடம்பிடித்து வெற்றி பெற்றுள்ளார்.

தற்போது பூரண சுந்தரிக்கு பலர் பாராட்டுகளைத் தெரிவித்துவருகின்றனர். இதுகுறித்து பூரண சுந்தரி பேசியபோது, "பெற்றோர்கள் மிகவும் கஷ்டப்பட்டு என்னை படிக்கவைத்தனர். அவர்களுக்கு பெருமை சேர்க்கவேண்டும் என்ற எண்ணத்தில்தான் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதிவந்தேன். முதல் 3 முறை எழுதி தோல்வி அடைந்தும் பெற்றோர் மற்றும் நண்பர்கள் அளித்த ஊக்கத்தின் காரணமாக 4வது முறை தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளேன். தன்னம்பிக்கையுடன் தொடர்ந்து முயற்சித்தால் வெற்றி நிச்சயம்" என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற பார்வை மாற்றுத்திறனாளி மாணவி பூரண சுந்தரிக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது டிவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.