மார்த்தாண்டம் அருகே குழித்துறை வழியாக அதிவேகமாக சென்ற மர்ம கார் மோதிய விபத்தில் ஐந்து டூவீலர்கள் சேதம் அடைந்தன. நேற்று நண்பகல் சுமார் ஒரு மணியளவில் குழித்துறையில் இருந்து கழுவன்திட்டை நோக்கி ஒரு சொகுசுகார் அதிவேகத்தில் பறந்து சென்றது. குழித்துறை போஸ்ட் ஆபீஸ் ஜங்ஷன் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் நிறுத்திவிடப்பட்டிருந்த ஐந்து டூவீலர்கள் மீது மோதி விபத்திற்குள்ளானது.
அங்கு நின்ற பொதுமக்கள் ஓட்டம் பிடித்தனர். ஆனால், டிரைவர் காரை நிறுத்தாமல் வேகமாக கொண்டு சென்றார். அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதிவேகமாக கார் சென்றதால் அதில் கடத்தல் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பொதுமக்கள் களியக்காவிளை போலீசில் புகார் செய்தனர்.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.