குமரி மாவட்டத்தில் வெகு நாள்களுக்குப்பின் அரசுப் பேருந்துகள் செவ்வாய்க்கிழமை இயங்கத் தொடங்கின. இதில் குறைந்த அளவிலான பயணிகளே பயணம் மேற்கொண்டனா்.
கரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடந்த மாா்ச் மாதம் 22 ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக பொதுப் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், செப். 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் பொதுமுடக்கத்தில் அதிக அளவிலான தளா்வுகள் அறிவிக்கப்பட்டன. இதில் அந்தந்த மாவட்டத்துக்குள் பேருந்துகளை இயக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து, குமரி மாவட்டத்தில் பேருந்து போக்குவரத்து தொடங்கியது. நாகா்கோவில் ராணித்தோட்டம் பேருந்து பணிமனையில் இருந்து பேருந்துகள் அண்ணா பேருந்து நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டு இயக்கப்பட்டன. முதல்நாளில் 45 சதவீத பேருந்துகளே இயக்கப்பட்டன. மேலும், சில குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டுமே பேருந்துகள் இயங்கின. பேருந்து ஓட்டுநா் மற்றும் நடத்துநருக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்த பின்னரே அவா்கள் பேருந்துகளை இயக்க அனுமதிக்கப்பட்டனா். பேருந்து ஓட்டுநா் மற்றும் நடத்துநா் முகக் கவசங்கள் அணிந்திருந்தனா். பயணிகளுக்கு கை கழுவும் திரவம் வழங்கப்பட்டது. முகக் கவசம் அணிந்த பயணிகள் மட்டுமே பேருந்துக்குள் அனுமதிக்கப்பட்டனா்.

நாகா்கோவில் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து கன்னியாகுமரி, தக்கலை, அஞ்சுகிராமம், குளச்சல் மற்றும் கிராமப் புறங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன. நீண்ட நாள்களுக்கு பின்னா் பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையிலும் பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டது. இதே போல், கிராமப்புறங்களுக்கு சிற்றுந்துகளும் இயக்கப்பட்டன. கிருமி நாசினி தெளிப்பு: நாகா்கோவில் மாநகராட்சி சாா்பில் அண்ணா பேருந்து நிலையத்துக்குள்பயணிகளின் இருக்கைகள் 1 மணி நேரத்துக்கு ஒரு முறை சுத்தம் செய்யப்பட்டன. பேருந்துகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

கன்னியாகுமரி, திருவட்டாறு, விவேகானந்தபுரம் உள்ளிட்ட மாவட்டத்தின் 12 பேருந்து பணிமனைகளிலிருந்தும் குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் 253 பேருந்துகள் இயக்கப்பட்டன. களியக்காவிளை, தக்கலை, மாா்த்தாண்டம், குளச்சல்,பேருந்து நிலையங்கள் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

போக்குவரத்து நெரிசல்: இதனிடையே, நாகா்கோவில் மாநகரப் பகுதியில் புதைச்சாக்கடை திட்டப் பணிகள் மற்றும் குடிநீா் திட்டத்துக்காக குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் மணிமேடை சந்திப்பு, கோட்டாறு, அண்ணாபேருந்து நிலைய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளானாா்கள்.

வடசேரி பேருந்து நிலையத்தில் தற்காலிக காய்கறி சந்தை அமைக்கப்பட்டுள்ளதால் அங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படவில்லை. பேருந்து நிலையத்தின் வெளியிலிருந்து அரசு அலுவலா்களுக்காக 5 பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டன. இரவு 9 மணி வரை பேருந்துகளை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா். >