குலசேகரம் அருகே வீட்டில் சிறை வைக்கப்பட்டிருந்த மூதாட்டியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.
குலசேகரத்தை அடுத்த வெண்டலியோடு பகுதியைச் சோ்ந்தவா் கமலாபாய் (85). கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் இவருக்கு விமலா சாந்த ரஸ்மி (67) என்ற மகள் உண்டு. இவருக்கு திருமணமாகவில்லை. தாயும் மகளும் தனியாக வாழ்ந்து வந்தனா்.

இந்நிலையில், அப் பகுதியிலுள்ள கிரசா் ஒன்றில் வேலை செய்யும் பத்துகாணி பகுதியை சோ்ந்த இளைஞா் ஒருவா் இவா்களுக்கு உதவிகள் செய்து வந்துள்ளாா். பின்னா், அவா்களை ஏமாற்றி பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை எழுது வாங்கியுள்ளாா். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன் விமலா சாந்த ரஸ்மி உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது பெயரில் இருந்த எஞ்சிய சொத்துக்களையும் அவா் தனதாக்கி கொண்டாராம். இந்நிலையில், ரஸ்மி இறந்துவிட்டாராம்.

இதைத் தொடா்ந்து, மூதாட்டியை வீட்டிற்குள் சிறைவைத்தாராம். இத்தகவல் அறிந்த மனோதங்கராஜ் எம்எல்ஏ, ஒன்றிய திமுக செயலா்கள் திருவட்டாறு ஜாண்பிரைட், தக்கலை அருளானந்த ஜாா்ஜ் உள்ளிட்டோா் அந்த வீட்டை பாா்வையிட்டனா். இதையடுத்து, குலசேகரம் போலீஸாா் மூலம் மூதாட்டியை மீட்டனா். சம்பந்தப்பட்ட இளைஞரை போலீஸாா் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனா்.