ஆசிய நாடான சிங்கப்பூரின் பார்லிமென்ட் எதிர்க்கட்சித் தலைவராக, இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட, பிரீதம் சிங், 43, நியமிக்கப்பட்டுள்ளார். சிங்கப்பூர் எதிர்க்கட்சித் தலைவராக, இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.சிங்கப்பூரில், சமீபத்தில் பார்லிமென்ட் தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள, 93 இடங்களில், 83 இடங்களில் வென்று, மக்கள் செயல் கட்சி வென்றது. லீ சியன் லுாங், மீண்டும் பிரதமரானார்.
இந்நிலையில், 10 இடங்களில் வென்ற தொழிலாளர் கட்சித் தலைவரான பிரீதம் சிங், எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் பலர், எதிர்க்கட்சித் தலைவராக இருந்துள்ளனர். ஆனால், முதல் முறையாக, அரசு சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர், எதிர்க்கட்சித் தலைவராவதும் இதுவே முதல் முறையாகும்.

இதற்கிடையே, 'இந்தியா உட்பட வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் முக்கிய வேலைகளைப் பெற்று விடுகின்றனர். அதனால், சிங்கப்பூரைச் சேர்ந்தவர்களுக்கு முக்கிய வேலைகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும்' என, சிங்கப்பூரைச் சேர்ந்த தொழிலாளர் சங்கத் தலைவரும், எம்.பி.,யுமான பேட்ரிக் டே, பார்லி.,யில் பேசுகையில் குறிப்பிட்டுள்ளார்.