நாகர்கோவில் அருகே கீழ ஆசாரிபள்ளத்தில் முன் விரோதம் காரணமாக தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்தவரை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : நாகர்கோவில் அருகே ஆசாரிபள்ளத்தை சேர்ந்தவர் அலெக்ஸ் பிரேம் 38 கூலித்தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த புருஷோத் என்பவருக்கும் இவருக்கும் இடையே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் ஒருவரை ஒருவர் மாறி மாறி அடித்துள்ளனர். இது தொடர்பாக ஆசாரிபள்ளம் போலீசார் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் இரவு அலெக்ஸ் பிரேம் வீடு அருகே நின்று கொண்டிருக்கும் போது அங்கு வந்த புருஷோத் குடிபோதையில் அவரிடம் தகராறு செய்துள்ளார். இதில் அலெக்ஸ் பிரேமை கீழே தள்ளி அடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த அலெக்ஸ் பிரேம் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து போனார். இது தொடர்பாக ஆசாரிபள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து புருஷோத்தை கைது செய்தனர். இதை தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக மேலும் 5 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகின்றது