போதையின் உச்சத்தில் மனைவியே கணவரை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தை சேர்ந்தவர்கள் விஷால் தேவன் (வயது 42) , சபினா ரோஷன் (வயது 50) தம்பதியினர். இருவரும் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். விஷால் தேவன் ராணுவத்தில் லெப்டினனட் கர்னலாக பணியாற்றி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வுபெற்றுள்ளார். அதைப்போல சபினா ரோஷன் ராணுவத்தில் மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். மருத்துவர் சபினாவிற்கு முதல் கணவரின் மூலம் ஒரு பெண் குழந்தை உள்ளது. பின்னர் விஷால் மற்றும் சபிதா திருமணம் செய்து கொண்ட பிறகு அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. இருவரும் தங்களது மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்தனர்.

கணவன் - மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வாக்குவாதம் ஏற்படுவது வழக்கமாக இருந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் ஒருவருக்கொருவர் கடுமையாக தாக்கிக்கொள்வதும் அடிக்கடி நிகழ்ந்துள்ளது. கடந்த மாதம் இருவருக்கும் ஏற்பட்ட சண்டையால் சபினாவின் முதுகெலும்பு பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவரை கணவர் விஷால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் கணவன் மனைவி இருவரும் மது பழக்கம் கொண்டவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர். சபினாவும் அளவுக்கு அதிகமாக போதை ஆகும் அளவுக்கு மது அருந்த கூடியவர் என்றும், புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர் என்றும் போலீசார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல இருவரும் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். பின்னர் இருவருக்கும் இடையே பண பிரச்சினை குறித்து வாக்குவாதம் எழுந்துள்ளது. மேலும் சில குடும்ப பிரச்சனை குறித்தும் வாக்குவாதம் செய்துள்ளனர். இது வழக்கமாக நடக்கும் ஒன்றும் என்பதால் அவர்களில் பிள்ளைகள் இதை கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில் போதையின் உச்சிக்கு சென்ற மருத்துவர் சபினா, கணவர் மீது இருந்த ஆத்திரத்தில் இறைச்சி வெட்டும் கத்தியை வைத்து கணவரை சரமாரியாக குத்தியுள்ளார். கணவர் விஷாலின் அலறல் சத்தம் கேட்டு வந்த பிள்ளைகள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அவரை சோதித்த மருத்துவர்களோ, அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் அவரது உடலை உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும் மனைவி சபினாவை இந்திய குற்றவியல் சட்டம் 302-ன் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். கணவன் மனைவி இருவரும் அடிக்கடி சண்டை போட்டு கொள்வது வழக்கம் என்றும், இருப்பினும் கொலை செய்யும் அளவிற்கு பிரச்சனை செல்லும் என எதிர்பார்க்கவில்லை என்றும் அவரது குழந்தைகள் வருத்தத்தோடு தெரிவித்துள்ளனர்.