முகமத் பின் சல்மான் ... இந்தப் பேரைக் கேட்டாலே சவூதி அரேபியாப் பாலைவனம் முழுவதும் அதிர்கிறது. முகமத் பின் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சவுத் என்னும் முழுப் பெயர் கொண்ட முகமத் பின் சல்மான் தான் சவூதி அரேபியாவின் தற்போதைய பட்டத்து இளவரசர்.
சவூதி அரேபியாவின் அரசரும் தன்னுடைய தந்தையுமான கிங் சல்மானைப் பின்னாலிருந்து இயக்கும் சக்தியாக இருப்பவர் இளவரசர் முகமத் பின் சல்மான்.

சூப்பர் பவா் நாடாகச் சவூதி
மதப் பழமைவாதமும், எண்ணைய் வளமும் மண்டிக் கிடக்கும் சவூதி அரேபியாவைத் தன்னுடைய முற்போக்கான சீர்திருத்த நடவடிக்கைகளின் மூலமாகச் சூப்பர் பவா் நாடாக மாற்ற முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் இளவரசர் சல்மான். அரசியல், பொருளாதாரம், மதம் சார்ந்த சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் முகமத் பின் சல்மான் உலகத்துக்குச் சொல்லும் செய்தி இதுதான்... 2030ஆம் ஆண்டுக்குள் சவூதி அரேபியாவை உலகின் சக்தி வாய்ந்த நாடுகளுள் ஒன்றாக மாற்றுவது என்பதுதான் அச்செய்தி.

பெண் சுதந்திரம்
மதம்சார்ந்த கண்காணிப்பாளர்களின் (Religious Police) அதிகாரத்தைக் குறைத்தது, பெண்களைப் பொது இடங்களில் வாகனம் ஓட்ட அனுமதித்தது, பெண்கள் இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்கும் இசை நிகழ்ச்சிகளை நடத்தவும் அனுமதி, விளையாட்டுப் போட்டிகளை நேரடியாகக் கண்டுகளிக்க அனுமதி, அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எனப் பெண்ணுரிமைப் போராளியாகவே இளவரசர் சல்மான் மாறிவிட்டார்.

எதிர்ப்புகளே இல்லை..
வளைகுடா நாடுகளின் நவீன வரலாற்றை முன்னெடுத்துச் செல்லும் நாயகனாகத் திகழும் இளவரசர் சல்மானின் செயல் வேகத்தில் அவரை எதிர்ப்பவர்கள் ஓரங்கட்டப்படுகின்றனர் அல்லது ஒதுங்கிக் கொள்கின்றனர்.