தாழக்குடி அருகே சீதப்பாலில் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்து சிறுவன் பலியானான்.

குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள முத்தலக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ராமசந்திரன். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். ராமசந்திரனின் மனைவி கலையரசியின் அக்கா கவிதா, சீதப்பால் சிவன் கோவில் அருகே வசித்து வருகிறார். அவரது கணவர் பரமசிவம் என்பவரும் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் கவிதாவின் மகளின் பூப்புனித நீராட்டுவிழா கொரோனா ஊரடங்கு காரணமாக நேற்று முன்தினம் சீதப்பாலில் உள்ள அவரது வீட்டில் எளிமையாக நடந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கலையரசி மகள் அஞ்சனா மற்றும் மகன் அஸ்விந்த் (வயது 5) உடன் சீதப்பால் சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை அஸ்விந்த் வீட்டின் முன்பகுதியில் உள்ள குறுகிய சந்து பகுதியில் விளையாடி கொண்டிருந்தபோது, வீட்டின் முன்பகுதி காம்பவுண்ட் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. கண் இமைக்கும் நேரத்தில் இடிந்து விழுந்த காம்பவுண்ட் சுவரின் இடிபாடுகளில் சிக்கி அஸ்விந்த் உயிருக்கு போராடினான். சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தபோது அஸ்விந்த் உயிருக்கு போராடி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அவனை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர், அஸ்விந்த் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து ஆரல்வாய்மொழி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆரல்வாய்மொழி காவல்நிலைய ஆய்வாளர் அன்புமணி பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.






0 Comments