அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் கால்வாயை நேரில் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகள் இருப்பின் 4 வாரத்தில் அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
கன்னியாகுமரி மாவட்டம் குள்ளத்தூரை சேர்ந்த விசு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," நாகர்கோவிலில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறேன். குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் தாலுகா கீழ்குளத்தூரில் ஆதிதிராவிடர் காலனி உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

நாகர்கோவில் மாநகராட்சியில் இருந்து குளத்தூர் ஆதிதிராவிடர்காலனி வழியாக பாசனத்திற்காக பறக்கை கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயை பலப்படுத்துவதற்காக தடுப்பு சுவர் கட்டப்பட்டுள்ளது. இந்த தடுப்புச்சுவர் மீதும், கழிவு நீரோடை மீதும் அங்குள்ளவர்கள் கட்டிடம் கட்டியுள்ளனர். மேலும் பொது இடத்தை ஆக்கிரமித்து பயன்படுத்தி வருகின்றனர். சட்டத்துக்கு புறம்பாக அங்கு அடுக்குமாடி கட்டிடம் கட்டி வருவதால் பறக்கை கால்வாய் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து, கால்வாயில் தண்ணீர் செல்ல முடியாமல் தடை ஏற்படுவதுடன், அருகில் உள்ள குடியிருப்புகளுக்கும் சேதம் விளைவிக்கும் நிலை உள்ளது.

இதனால் விவசாய நிலங்களும் பாதிக்கப்படும். இந்த ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கும்படி ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் பலன் இல்லை. நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர் நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஆனாலும் அரசியல் பலத்தினால் பறக்கை கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. ஆகவே பறக்கை கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வு, "அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் நேரில் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகள் இருப்பின் 4 வாரத்தில் அவற்றை அகற்ற உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.