ஈரான் நாட்டுக்கு மீன்பிடி தொழிலுக்காக சென்ற குமரி மீனவர்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்தனர். அவர்களை இந்தியாவுக்கு அழைத்துவர தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பல்வேறு தொடர் நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டுதலுடன் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெயசங்கரை நேரில் சந்தித்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
அதன் பயனாக ஈரான் நாட்டில் இருந்த மீனவர்கள் கப்பல் மூலம் சொந்த மாவட்டத்திற்கு அழைத்து வரப்படுகிறார்கள். அவர்களை தனிமைப்படுத்தி தங்க வைக்க தூத்தூர் புனித யூதா கல்லூரி, தொலையாவட்டம் அன்னை வேளாங்கண்ணி கல்லூரி, அதங்கோடு நாராயணகுரு கல்லூரி, வெள்ளமோடி உதயா கல்லூரி, கடியப்பட்டணம் புனித ஜாண்ஸ் கல்லூரி, அழகப்பபுரம் அன்னை வேளாங்கண்ணி கல்லூரி, தோவாளை சி.எஸ்.ஐ. பெறியியல் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கல்லூரிகளில் செய்யப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை, கலெக்டர் பிரசாந்த் வடநேரே நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், பத்மநாபபுரம் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா அரி, குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ் சாஸ்திரி, பயிற்சி உதவி கலெக்டர் ரிஷாப், கிள்ளியூர் தாசில்தார் ராஜசேகர், கல்குளம் தாசில்தார் ஜெகதா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.