மணிப்பூரில் நடக்கும் அதிரடி அரசியல் மாற்றங்களால், பா.ஜ., ஆட்சி கவிழும் சூழல் உருவாகி உள்ளது. கவர்னரை சந்தித்து, ஆட்சி அமைக்க காங்., கட்சி உரிமை கோரியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் மொத்தம் 60 சட்டசபை இடங்கள் உள்ளன.

கடந்த 2017-ல் நடந்த தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் 28 இடங்களை பெற்றது. இருப்பினும் 21 இடங்களை பெற்ற பா.ஜ., கட்சிக்கு 4 இடங்களை பிடித்த நாகா மக்கள் முன்னணி, மற்றும் தலா ஒரு இடங்களை வென்ற எல்.ஜே.பி., சுயேட்சை , ஏ.ஐ.டிசி உள்ளிட்ட பிற கட்சிகள் ஆதரவு அளித்து வந்தது. முதல்வராக பா.ஜ.வை சேர்ந்த என்.பிரேன்சிங் முதல்வாராக பதவி வகித்து வருகிறார்.
தற்போது பா.ஜ.,வுக்கு அளித்து வந்த ஆதரவை, 9 கூட்டணி எம்.எல்.ஏ.,க்கள் வாபஸ் பெற்றனர். இதனையடுத்து, சுயேட்சைகளின் ஆதரவுடன், காங்., ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், கோன்ராட் சங்மாவின் தேசிய மக்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் காங்., கட்சிக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
இந்த புதிய கூட்டணிக்கு, திரிணாமுல் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ., ஒருவரும், சுயேட்சை எம்.எல்.ஏ., ஒருவரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.இக்கூட்டணி கட்சிகளின் தலைவராக இருக்கும் ஒக்ரம் இபோதி சிங், கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார். மேலும் சட்டசபையை கூட்டி, நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தவும் வலியுறுத்தி உள்ளார். இந்த அதிரடி மாற்றங்களால், பா.ஜ., ஆட்சி பறிபோகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.






0 Comments