தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கை மீறி செல்போன் கடையை திறந்து வைத்திருந்ததாக போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் 2 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தந்தை, மகனை கொன்ற போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறித்தி போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, காவல் நிலையங்களிலும், பொதுமக்களிடமும் போலீசார் எவ்வாறு நடந்து கொள்ள என்பது பற்றி டிஜிபி, பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறார். இதை குமரி மாவட்டம் முழுதும் நடைமுறைபடுத்தும் வகையில் எஸ்.பி.ஸ்ரீநாத், போலீசாருக்கு புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

கொலை வழக்குகளில் தொடர்பு உடையவர்கள், பெரிய அளவில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை செய்பவர்களை மட்டும் கைது செய்தால் போதும். இன்னுமா 2 வாரத்துக்கு காவல்துறையினர் மிகவும் கவனமாக நடந்து கொள்ளவேண்டும்.

இந்திய தண்டனை சட்டம் 353-ன் கீழ் (அரசு பணியை செய்யவிடாமல் தடுத்தல்) கைது செய்யும் நபராக இருந்தால் அவரை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லக்கூடாது. அருகில் இருக்கும் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று தான் விசாரிக்க வேண்டும்.

பொது மக்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசாதீர்கள். மிகவும் கனிவுடன் நடந்து கொள்ளவேண்டும். காவல்துறையினர் மிகவும் கஷ்டப்பட்டு வேலை பார்க்கிறோம். ஆனால் சாத்தான்குளம் சம்பவத்துக்கு பிறகு, காவல் நிலையத்துக்கு வரும் பொதுமக்கள் போலீசாரை பார்க்கும் கண்ணோட்டம் மாறி இருக்கும். எனவே போலீசார் யாரையும் தரக்குறைவாக பேசாதீர்கள். அன்பாக பேசி, பிரச்னையை விளக்கவேண்டும்.

போலீசாருக்கு சப் டிவிஷன் வாரியாக, ஆன்லைன் பயிற்சி முகாம் நடக்க இருக்கிறது. இதில் அனைவரும் கலந்து கொள்ளவேண்டும். சாதாரண பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யவேண்டாம். 2 வாரங்களுக்கு அதை நிறுத்தி கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு அதிக அளவில் இடையூறு செய்பவர்கள் மீது வழக்குபதிவு செய்தால், அதை உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று, அவர்கள் முன்னிலையில் தான் விசாரிக்க வேண்டும்.

பொதுமக்களிடம் ஆபாசமாக பேசுதல், தரக்குறைவாக நடந்து கொள்வது போன்றவை தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கவனமாக பணியாற்ற வேண்டும். இவ்வாறு அந்த கூறியுள்ளார்.