தக்கலையில் திடீரென துவங்கப்படவுள்ள மேம்பால பணியை நான்கு வழி சாலை பணி நிறைவுக்குப் பின் போக்குவரத்து நெருக்கடி இருந்தால் துவங்க சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் பத்மநாபபுரம் நகர தொழில் வணிகம் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
பார்வதிபுரம், மார்த்தாண்டம் ,தக்கலை உள்ளிட்ட பகுதிகளில் மேம்பால பணிகள் நடத்த நிதி ஒதுக்கப்பட்டு பார்வதிபுரம், மார்த்தாண்டம் ஆகிய பகுதிகளில் மேம்பால பணிகள் முடிந்து போக்குவரத்து துவங்கியது. ஆனால் இரண்டு பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் வாடுகின்றனர். கடைகளை தொழில்களை இழந்து தவிக்கும் மக்கள் வாழ்க்கையில் முன்னேற கால் வைப்பதற்குள் மீண்டும் ஒரு நெருக்கடியை மக்கள் மத்தியில் திணிக்க முற்படுவது தவறிய பாதையாகும். அதாவது கொல்லன் விளை முதல் மணலி வரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் மேம்பால பணிகள் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் நடந்து வருகிறது.

ஏற்கனவே மத்திய அரசு திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி முதல் திருவனந்தபுரம் வரை நான்கு வழி சாலை பணிகள் தொடர்ந்து நடந்து வந்த நிலையில், அந்த பணிகள் தோய்வடைந்து உள்ளது. நான்கு வழி சாலை பணிகள் முடித்து அந்த பகுதி வழியாக போக்குவரத்து துவங்கி விட்டால் சுமார் 65 சதவீத வாகனங்கள் நான்கு வழி சாலை வழியாக சென்று விடும். இதனால் தக்கலை பகுதியில் போக்குவரத்து நெருக்கடி குறையும் என்பது உண்மையாகும். நான்கு வழிச்சாலை பகுதிகளில் அமைக்கப்படும் குறுக்கு சாலைகளால் வாகன போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கும்.

இந்நிலையில் நிறுத்தப்பட்டிருந்த கொல்லன் விளை, மணலி மேம்பால பணியை துவங்க அதிகாரிகள் சில நாட்கள் ஆய்வுகள் மேற்கொண்டதால் அனைத்து தரப்பு மக்களையும் கோபத்துக்கு உள்ளாக்கியுள்ளது. ஏற்கனவே கடந்த 71 நாட்களாக கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் மத்திய அரசு அமல்படுத்திய ஊரடங்கு உத்தரவை வியாபாரிகள் கடை பிடித்து கடைகளை அடைத்தனர் .மார்க்கெட் மூடப்பட்டது. இதனால் அனைத்து வியாபாரிகளும், தொழிலாளர்களும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். இழந்த வாழ்வாதாரத்தை மீட்க பல மாதங்கள் ஆகும்.

இப்பேர்பட்ட சூழ்நிலையில் மேம்பால பணிகள் துவங்குவதை தவிர்த்து நான்கு வழி சாலை தரப்புக்கு பின் போக்குவரத்து நெருக்கடி இருந்தால் மேம்பால பணியை தங்குதடையின்றி துவங்கலாம். நான்கு வழிச்சாலை பணி முடிந்து திறக்கும் வரை கொல்லன் விளை, மணலி மேம்பால பணி துவங்குவதை கைவிட வேண்டுமென பத்மநாபபுரம் நகர தொழில் வணிகம் சங்கமும் ,பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வசந்தகுமார் எம்பியிடம் பத்மநாபபுரம் தொழில் வணிகர் சங்கம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. மனுவை பெற்று அவர் நகர பகுதியை பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.