நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியில் தங்கும் விடுதியில் அரசின் தடையை மீறி பொதுமக்கள் தங்கி இருப்பதாக வந்த தகவலின் படி மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி ஆய்வு செய்தனர்.
நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியில் உள்ள பிரபல தங்கும் விடுதியில் அரசின் தடையை மீறி பொதுமக்களை தங்க அனுமதித்துள்ளதாக மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி ஆணையர் சரவணகுமார் உத்தரவின் பேரில் மாநகராட்சி நல அலுவலர் கிங்சால் தலைமையில் சுகாதார ஆய்வாளர் ஜாண் மற்றும் அதிகாரிகளால் தங்கும் விடுதிக்கு அதிரடியாக சென்றனர்.

அப்போது தங்கும் விடுதி ஊழியர்கள் பூட்டு போட்டு சென்றிருந்தனர். இதனால் அதிகாரிகளுக்கு உள்ளே சென்று ஆய்வு செய்ய முடியாததால் மாநகராட்சி சார்பிலும் பூட்டு போட்டனர். இதை தொடர்ந்து விடுதி உரிமையாளர் ஆணையரை சந்தித்து விளக்கம் கொடுத்ததை தொடர்ந்து மாநகராட்சி சார்பில் போடப்பட்ட பூட்டை அதிகாரிகள் அகற்றினர். மறு அறிவிப்பு வரும் வரை தங்கும் விடுதியை திறக்க கூடாது என்பதை நடைமுறை படுத்துவதாக உறுதி அளித்து தங்கும் விடுதி உரிமையாளர் பூட்டு போட்டதால் நாங்கள் போட்ட பூட்டை அகற்றினோம் என்று நகர் நல அலுவலர் கிங்சால் தெரிவித்தார்.