தக்கலையில் மேம்பாலம் வருவதை தவிர்த்து புலியூர்குறிச்சியில் பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் பொதுமக்கள் சார்பில் முளகுமூடு வட்டாரம் முன்னாள் குருகுல முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில்ஜார்ஜ் பொன்னையா கூறியிருப்பதாவது குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரம் தக்கலை இந்நகரை சுற்றியுள்ள பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழ்கின்றனர். இது வரலாற்று சிறப்புமிக்க நகரம். முந்தைய காலத்து திருவிதாங்கூர் நாட்டின் தலைமை இடமான பத்மநாபபுரம் இங்கு உள்ளது. இங்கு உள்ள பத்மநாபபுரம் அரண்மனை ஒரு சுற்றுலா தலமாக விளங்குகின்றது.
இங்குள்ள பேட்டை சந்தை ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. இங்கு அரசு தலைமை மருத்துவமனை, நீதிமன்றம் அரசு துறை, முக்கிய அலுவலகங்கள் உள்ளன. ஏராளமான கல்வி நிறுவனங்களும் உள்ளன. தக்கலை என்ற பெயரே மக்களின் வாழ்வோடும் உயிரோடும் இணைந்த பெயராகவே உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் தக்கலையை தலைமையிடமாக கொண்ட பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் ஆணையத்தால் நீக்கப்பட்டபோது மாபெரும் போராட்டம் நடந்தது. தொகுதி மீட்கப்பட்டது. இந்நகரை சுற்றி மும்மத வழிபாட்டு ஸ்தலங்கள் திருத்தலங்கள் உள்ளன. ஆகவே இந்த நகருக்கு ஒரு தெய்வீக தன்மை உண்டு.
தக்கலையில் மேம்பாலம் கட்ட அரசு திட்டமிட்டுள்ளதாக அறிந்து நாங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளோம். ஏற்கனவே இதை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்றன. நான்கு வழிச்சாலை பணி நடந்து வருகிறது. எனவே இங்கு மேம்பாலம் தேவைப்படாது அதற்குரிய நிதியை தக்கலை நகரை அழகுபடுத்தும் இதைச் சுற்றியுள்ள குளங்களை தூர்வாரவும், பாழ்பட்டுக் கிடக்கும் வரலாற்று சிறப்புமிக்க சாரோடு குளத்தை தூர்வாரவும், தக்கலை பேருந்து நிலையத்தை நவீனப்படுத்தவும், தக்கலை அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி புற்றுநோய் சிகிச்சை மையம் கொண்டு வரவும், புலியூர்குறிச்சி பல்கலைக்கழகம் கொண்டு வரவும் பயன்படுத்தலாம் மேம்பாலம் வருவதால் வரலாறு சிதைக்கப்படும். வாழ்வாதாரங்கள் அளிக்கப்படும். ஆகவே தமிழக முதல்வர் உடனடியாக இத் திட்டத்தை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் அனுப்பியுள்ள மனுவில் இவ்வாறு கூறியுள்ளார்.






0 Comments