தென்தாமரைகுளத்தில் ஒருதலை காதலால் வாட்ஸ்அப்பில் கொலை மிரட்டல் விடுத்து விட்டு வேன் மற்றும் சொகுசு காரின் கண்ணாடிகளை உடைத்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தென்தாமரைகுளத்தை சார்ந்த 21 வயது இளம்பெண் நாகர்கோவிலில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் வேலை பார்த்து வந்தார். அதே ஊரை சேர்ந்தவர் கார்த்திக் ( 25). டெம்போ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கார்த்திக் அந்த இளம்பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இதனால் அந்தப் பெண் வேலை பார்க்கும் கம்ப்யூட்டர் சென்டரில் சென்று பிரச்னை ஏற்படுத்தியுள்ளார். பின்னர் அந்த இளம்பெண் வீட்டிற்கு பஸ்ஸில் வரும்போது பஸ்ஸில் ஏறி தகராறு செய்துள்ளார்.
இதனால் அந்த இளம்பெண் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் கார்த்திக் அந்த வீட்டின் சுவற்றில் கொலை மிரட்டல் விடுத்தும், வீட்டிலும் சென்று பிரச்சினைகள் செய்து வேனின் கண்ணாடியை கடந்தசில மாதங்களுக்கு முன்பு உடைத்துள்ளார். இதுகுறித்து இளம்பெண்ணின் வீட்டார் ஏற்கனவே தென்தாமரைகுளம் போலிசில் புகார் அளித்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த பெண் கோவிலுக்கு சென்றிருந்தார் அப்போது கார்த்திக் அந்த இளம்பெண்ணை பின் தொடர்ந்து சென்று தொந்தரவு செய்துள்ளார். இதனால் அந்த பெண் வீட்டிற்கு ஓடிவந்து விட்டார்.
அவரை பின் தொடர்ந்து வந்த கார்த்திக் ஆத்திரத்தில் அந்த இளம்பெண்ணின் உறவினரான பிரதாப்பிற்கு(33) வாட்ஸ்அப்பில் கொலைமிரட்டல் விடுத்துவிட்டு பிரதாப்பிற்கு சொந்தமான சொகுசு கார் மற்றும் வேன் ஆகியவற்றின் கண்ணாடிகளை அடித்து உடைத்துள்ளார். கண்ணாடி உடைக்கும் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வரவே கார்த்திக் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து பிரதாப் தென்தாமரைகுளம் போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலிசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கார்த்திகை வலைவீசி தேடி வருகின்றனர்.






0 Comments