தக்கலை காமராஜ் பேருந்து நிலையம் முன் பெங்களூரில் இருந்து வந்த லாரியில் இருந்து விழுந்த இரும்பு கம்பிகளை பார்த்து பாதசாரிகள் அலறியடித்து ஓடினர்.

பெங்களூரிலிருந்து பெரிய லாரியில் சுமார் 15 அடி நீளமுள்ள மூவாயிரத்துக்கு மேற்பட்ட கம்பிகள் வேளாங்கோட்டைக்கு வந்து கொண்டிருந்தது. இந்த லாரி நேற்று அதிகாலையில் வில்லுக்குறி குமாரகோவில் வழி தக்கலை காமராஜ் பேருந்து நிலையம் முன் வரும்போது லாரியின் பக்கவாட்டில் உள்ள தடுப்பு கம்பி உடைந்து கயிறு அறுந்தது.
இதனால் அறையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கம்பிகள் சரசரவென சாலையில் விழ ஆரம்பித்தது அப்போது அவ்வழியாக வந்த கூலித் தொழிலாளர்கள் பாதசாரிகள் கம்பி விழும் சத்தத்தைக் கேட்டு கூக்குரலிட்ட படி மூச்சிரைக்க அலறி அடித்து ஓடினர்.
பாதசாரிகளின் அலறலைக் கேட்ட லாரி டிரைவர் சரவணன் சாமர்த்தியமாக லாரியை சாலையோரமாக நிறுத்தினார். இதனால் விபரீத விளைவுகள் தவிர்க்கப்பட்டன. இதைத் தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரம் பேருந்து பஸ் ஸ்டாண்டுக்கு உள்ளே சென்று வெளியே வர முடியாத அவல நிலை உருவானது. இதனால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. பாதசாரிகள் சாலையோரமாக நடந்து செல்ல முடியாத அளவுக்கு சூழ்நிலை உருவெடுத்தது.
இதை புரிந்து கொண்ட சமூக ஆர்வலர்கள் வேறொரு மினி லாரியை வரவழைத்து சாலையில் விழுந்து கிடந்த கம்பிகளை தூக்கி ஏற்றி அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து பஸ் ஸ்டாண்டுக்குள்ளே சென்ற பேருந்துகள் தங்குதடையின்றி வெளியே சென்றது. இந்த லாரியில் இருந்து விழுந்த நூற்றுக்கணக்கான கம்பிகளுக்கு இடையில் பாதசாரிகள் எவராவது சிக்கி இருந்தால் நிலைமை படுமோசமாக மாறி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.






0 Comments