குமரி மாவட்டத்தில் சிறை கைதிகள் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மாவட்டத்தில் 10 காவல் நிலையங்கள் இதுவரை மூடப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குடும்பம் குடும்பமாக தனிமைபடுத்தப்பட்ட முகாம்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை தொற்று பாதிக்கப்பட்டு தனிமைபடுத்தப்படுகின்றனர்.
காவல்துறையினர், அரசு அலுவலர்கள், களப்பணியில் உள்ள சுகாதார பணியாளர்கள், டாக்டர்கள், நர்சுகள் என தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். நகர்புற மற்றும் கிராமப்புற பகுதிகளிலும் உள்ள பல தெருக்களிலும் கொரோனா பரவியுள்ளது.
குளச்சல் ஏ.எஸ்.பி விஸ்வேஸ் பி.சாஸ்திரிக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து ஏ.எஸ்.பி. அலுவலகம் பூட்டப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் போலீஸ் ஒருவருக்கும் தொற்று உறுதியானது. இதனால் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையம் பூட்டப்பட்டது. மேலும் அங்கு பணியில் இருந்தவர்கள் தனிமைபடுத்தப்பட்டனர்.
காய்ச்சல், சளி அறிகுறி உள்ளவர்கள் கொரோனா பரிசோதனை செய்யவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுசீந்திர காவல் நிலைய போலீஸ்காரர் ஒருவருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சுசீந்திரம் காவல் நிலையம் பூட்டப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. ஏற்கனவே குமரி மாவட்டத்தில் வடசேரி, கொல்லங்கோடு, நித்திரவிளை, மார்த்தாண்டம் மதுவிலக்கு பிரிவு, கொற்றிகோடு, கடலோர சோதனை சாவடிகள் உள்ளிட்ட 10 காவல் நிலையங்கள் பூட்டப்பட்டுள்ளன.
இந்நிலையில் நாகர்கோவில் சிறைக்குள்ளும் கொரோனா தொற்று புகுந்துள்ளது. சமீபத்தில் நெல்லை மத்திய சிறையில் இருந்து ஒரு கைதியை, நாகர்கோவில் கிளைக்கு கொண்டு வந்து அடைத்தனர். திடீரென அவருக்கு காய்ச்சல் வந்ததை தொடர்ந்து அவருக்கு நடந்த பரிசோதனையில் தொற்று உறுதியானது. இதையடுத்து அவரை நீதிமன்ற உத்தரவுப்படி வீட்டுக்கு அனுப்பினர். அவரை அழைத்து வந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதில் அவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. சிறையில் அவருடன் ஒரே அறையில் இருந்த கைதிகளுக்கு நடந்த பரிசோதனையில் 18 பேருக்கு தொற்று உறுதியானது.
இதையடுத்து அவர்களும் தற்போது தனிமைபடுத்தப்பட்ட முகாம்களுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி மாற்றப்படுவார்கள் என கூறப்படுகிறது. 19 கைதிகள் உள்பட மொத்தம் 20 பேர் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் உத்தரவின் பேரில் மாநகராட்சி பணியாளர்கள் அங்கு சென்று கிருமிநாசினி தெளித்தனர்.






0 Comments