கன்னியாகுமரி மாவட்டத்தில் சமூக பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறுபான்மையினர் இனத்தை சேர்ந்தவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் தனிநபர் தொழில் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறுகடன் உதவிகள் வழங்கப்படுகிறது.
தனிநபர் தொழில் கடன் திட்டத்தின் கீழ் வியாபாரம் செய்யவும் தொழில் துவங்கிடவும் அல்லது ஏற்கனவே செய்து வரும் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கும் கடன் பெறலாம். சுய உதவி குழுக்களுக்கான சிறுகடன் பெற இக்குழுவில் குறைந்தபட்சம் 60 சதவீதம் சிறுபான்மையினராக இருத்தல் அவசியம். இதர 40 சதவீதம் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர், ஆதிதிராவிடர், பழங்குடியினர், இதர வகுப்பினர் இடம் பெற்றிருக்கலாம்.

கடன் தொகை பெற விண்ணப்பதாரர் 18 வயது முதல் 60 வயது உடையவராக இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடன் வழங்கப்படும். ஆண்டு வருமானம் கிராம புறங்களில் வசிப்பவராயின் ரூ.98000 மற்றும் நகர்புறங்களில் வசிப்பவராயின் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் உடையவராக இருத்தல் வேண்டும். டாம்கோ கடன் பெற விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், கன்னியாகுமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆகியவற்றில் விண்ணப்பித்து பயன் பெற வேண்டும் என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.