கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு துறைகள் மூலம் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்த மாவட்ட அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பழுதடைந்து உள்ள குடிநீர் குழாய்களை சரிசெய்து தேவையான இடங்களில் போர்வெல் அமைத்து பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் தடையின்றி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சி பகுதிகளில் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் அனைத்துத் துறை அலுவலர்களும், பணியாளர்களும் அந்தந்த பகுதிகளில் உள்ள பொதுமக்களை கண்காணித்து அவர்களுக்கு தொற்று அறிகுறிகள் இருந்தால் உடனே அவர்களை ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டும்.

அந்த பகுதிகளில் கிருமி நாசினி அடிக்கப்பட்டும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான பால், உணவு உட்பட அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைத்திடவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். களப்பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு முககவசங்கள், கையுறைகள் வழங்கி பாதுகாப்பான முறையில் பணி செய்வதை உறுதி செய்திட வேண்டும் என்று சம்மந்தபட்ட அலுவலர்களிடம் அறிவுறுத்தினார். மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, வன அலுவலர் அசோக்குமார், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், பயிற்சி உதவி கலெக்டர் ரிஷாப், நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில் உட்பட அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.