கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழி சோதனை சாவடி என்றால் தமிழகம் முழுவதும் பிரபலமாகி உள்ள ஒரு சோதனை சாவடியாகவே இருந்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

அந்த அளவிற்கு கொரோனா காலத்தில் கெடுபிடிகள் நிறைந்த சோதனை சாவடியாக இருந்து வருகிறது. இதை கடந்து மாவட்டத்துக்குள் வர வேண்டும் என்றால் அது சிம்ம சொப்பணமாகவே இருந்து வருகிறது. வெளி மாவட்டங்களில், மாநிலங்களில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வர சோதனை சாவடிகள் கடுமையான நெருக்கடிகள் இருந்து வந்தாலும் மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது.
மாவட்டத்தில் மாநகராட்சி ஊழியர், தலைமை தபால் நிலைய ஜீப் டிரைவர், வடசேரி அம்மா உணவக பணியாளர், வடசேரி போலீஸ் ஸ்டேஷனில் ஒருவருக்கு, தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள், மதுரையில் இருந்து மகளை பார்க்க வந்தவருக்கு, மெடிக்கல் விற்பனை பிரதிநிதி, பெயிண்டருக்கு, வியாபாரிகளுக்கு, ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து வந்த மணமகளின் தாய்க்கு என்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனா வைரஸை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 6 ம் தேதி நிலவரப்படி ஆசாரிபள்ளம் அரசு மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியிலும், களப்பணியாளர்கள் மூலமாகவும், சோதனை சாவடிகள் மூலமாகவும் 51 ஆயிரத்து 656 நபர்கள் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். ஆசாரிப்பள்ளம் அரசு மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியில் 400 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 388 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தெரிய வருகிறது. வடசேரி பஸ் ஸ்டாண்டில் செயல்பட்டு வந்த தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள் மற்றும் பணியாளர்கள் என்று 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.
இந்த தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமானவர்கள் தினமும் தங்கள் தேவைக்காக காய்கறிகள் வாங்கி சென்றுள்ளனர். அதேபோல் கிராம பகுதிகளில் உள்ள சின்ன வியாபாரிகளும் இங்கிருந்து காய்கறிகள் வாங்கி கிராம பகுதிகளில் விற்பனை செய்துள்ளனர்.
இது மாவட்ட மக்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தி வருகிறது. மாவட்டத்தில் ஐஎல்ஐ சர்வே எடுக்கும் பணியும் துவங்கி ஒரு வார காலத்திற்கு நடக்க உள்ளது. இதில் மாவட்ட மக்கள் சரியான தகவல்களை கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. கிராம பகுதிகளில் உள்ளவர்கள் சர்வே எடுக்க வருகின்றனர் என்ற அறிவிப்பு வெளியானதும் பயத்தில் இருந்து வருவதாக தெரிவிக்கின்றனர். மாவட்டத்தில் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருவது மாவட்ட மக்களுக்கு ஆறுதலாக இருந்தாலும் தற்போது உள்ள நிலையில் வேகமாக பரவி வருவதை பார்த்து மக்கள் திக்குமுக்காடி வருகின்றனர்.






0 Comments