கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனை கட்டுப்படுத்த மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது.
பல்வேறு வகையான விழிப்புணர்வுகளையும் பொது மக்களிடம் ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் அஞ்சுகிராமம் காவல் நிலையம், சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள், பேரூராட்சிப் பணியாளர்கள் , தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்ட கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு பேரணி அஞ்சுகிராமத்தில் நடந்தது. பேரணிக்கு கன்னியாகுமரி டி.எஸ்.பி பாஸ்கரன் தலைமை வகித்தார்.

பேரணி அஞ்சுகிராமம் காவல் நிலையத்திலிருந்து அஞ்சுகிராமம் சந்திப்பு, மேற்கு பஜார், வடக்கு பஜார், தெற்கு பஜார் பகுதிகளில் சென்று மீண்டும் காவல் நிலையத்தில் நிறைவடைந்தது. பேரணி நடத்தியவர்களை கவுரவிக்கும் விதமாக அஞ்சுகிராமம் பேரூர் கழக அதிமுக செயலாளர் ராஜபாண்டியன் தலைமையில், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ஜெஸீம், தொழிலதிபர் வஸீம், விவசாய அணி ஒன்றிய செயலாளர் மேட்டுக்குடி முருகன், ஜெ பேரவை செயலாளர் மணிகண்டன், பரமசிவன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செய்து, சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அஞ்சுகிராமம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் முருகேசன், கபிரியேல் சிறப்பு எஸ்.ஐக்ககள் டேனியல் அருள் சேகர், மோகன், தலைமை காவலர்கள் கோபுகுமார், மணிகண்டன், துரைப்பாண்டியன் கலந்து கொண்டனர்.