முட்டம் குருந்தன்கோடு வட்டார சுகாதார மருத்துவ அலுவலர் பிரதீப்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் நேற்று முன்தினம் மணவாளக்குறிச்சி பகுதியில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.
அதன்படி, மணவாளக்குறிச்சி மார்கெட்டில் உள்ள கடைக்காரர்கள், மீன் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் என மொத்தம் 93 பேரிடம் சளி மாதிரி எடுக்கப்பட்டது.

இந்த பரிசோதனையின் முடிவுகள் நேற்று மாலை சுகாதார துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முடிவில் மணவாளக்குறிச்சி பகுதி சுகாதார ஆய்வாளர் உள்பட 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது தெரியவந்தது.

அதன்படி, மணவாளக்குறிச்சி மார்க்கெட்டில் காய்கறி வியாபாரி, மீன் வியாபாரிகள், இறைச்சிக் கடைக்காரர், பொதுமக்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர் என 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனைதொடர்ந்து மணவாளக்குறிச்சி மார்க்கெட் மூடப்பட்டது. திங்கள்கிழமை முதல் மார்க்கெட் மணவாளக்குறிச்சி பேரூராட்சி அலுவலகம் முன் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் செயல்படும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.