மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் ஊரில் கொரோனாவுக்கு இறந்தவர் உடலை நேற்று எஸ்.டி.பி.ஐ. அமைப்பினர் எடுத்து சென்று அடக்கம் செய்தனர்.
குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் 28 பேர் பலியாகியுள்ளனர். இவர்களில் சிலரது உடல்கள் நாகர்கோவில் புளியடியில் உள்ள எரிவாயு தகன மேடையில் தகனம் செய்யப்பட்டது.

சில பகுதிகளில் உடல்களை சொந்த ஊருக்கு எடுத்து செல்வதை விரும்பாமல் உறவினர்கள் இப்படி மாநகராட்சிக்கு சொந்தமான தகன மேடையில் தகனம் செய்கின்றனர். இதற்காக அங்குள்ள ஊழியர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. சிலர் சொந்த ஊர்களுக்கு எடுத்து சென்று கொரோனாவுக்கு பலியானவர் உடல்களை அடக்கம் செய்யும் விதிமுறைகளுக்கு உள்பட்டு அடக்கம் செய்து வருகின்றனர்.
இருப்பினும் அச்சம் காரணமாக மக்கள் கலந்து கொள்ளவில்லை. அந்த வகையில் கடியப்பட்டணம் பகுதியில் 67 வயது நபர் ஒருவர் கொரோனாவுக்கு நேற்று முன்தினம் மரணமடைந்தார். அவரது உடலை எடுத்து சென்று அடக்கம் செய்ய உறவினர்கள் மணவாளக்குறிச்சி பகுதியில் உள்ள எஸ்டிபிஐ நிர்வாகிகள் மூலம் அணுகினர்.

அதன்படி நேற்று காலை 10 மணியளவில் எஸ்டிபிஐ அமைப்பினர் பலியானவர் உடலை ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்சில் எடுத்து செல்லப்பட்டது. காலை 11 மணியளவில் கடியப்பட்டணத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் கொண்டு சென்று உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களை பின்பற்றி அவர்கள் அடக்கம் செய்தனர்.
கல்லறை தோட்டத்தில் இறுதி சடங்கில் உறவினர்கள் கலந்து கொள்ளவில்லை. அதே வேளையில் பங்குதந்தை பபியோன்ஸ் கலந்து கொண்டு ஜெபம் செய்ய அடக்க வழிமுறைகள் நடைபெற்றன.

ஏற்கனவே கடியப்பட்டணம் பகுதியில் கொரோனாவால் பலியானவர் ஒருவர் உடலை பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் எடுத்து சென்று அடக்கம் செய்திருந்தனர்.